எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் தேசியப் பேரவை உப குழுவில் கவனம்!!
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கட்டுமானத் துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (11) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் கட்டுமானத் துறையுடன் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன் சம்பந்தப்பட்ட துறையினர் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
கட்டுமானத் துறையில் நேரடியாகப் பணிபுரியும் சுமார் 650,000 ஊழியர்களும், மறைமுகமாகப் பணிபுரியும் சுமார் 700,000 ஊழியர்களும் உள்ளதாக இதன்போது கலந்து கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனினும் தற்பொழுது கட்டுமானத் துறை வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக இந்தப் பணியாளர்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதேபோன்று, தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடி வீடுகள் மற்றும் அலுவலகம் போன்ற கட்டுமானங்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களின் ஒரு பகுதிக்கு அரசாங்கத்தினால் கட்டணம் செலுத்தாததனால் வங்கிக் கடன்களை மீள செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ள பலர் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோன்று, பொருளாதார நெருக்கடி காரணமாகக் காட்டுமானத் துறையிலுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகையில், இந்த சிக்கல்களுக்கு நிதி தேவைப்படும் தீர்வுகள், நிதி தேவைப்படாத தீர்வுகள் மற்றும் சட்ட ரீதியான தீர்வுகள் என்பவற்றை வேறுவேறாக கண்டறிந்து செயற்படவில்லை எனின் நாட்டின் பொறியியற் துறை பாரியளவில் வீழ்ச்சியடையும் எனக் குறிப்பிட்டார். இதனால் விரைவில் இது தொடர்பான முன்மொழிவுகளை பாராளுமன்றத்துக்கும் அரசாங்கத்துக்கு முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.