இந்தியாவுடன் இணைய வேண்டும்’ – பாகிஸ்தானின் கில்ஜித் பல்திஸ்தானில் மாபெரும் மக்கள் போராட்டம்!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தான் மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகக் கூறி நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்ஜித் பல்திஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வருகிறது. எனினும், அதனை இந்தியா ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளும் இணைந்திருப்பதான வரைபடமே இந்தியாவின் அதிகாரபூர்வ வரைபடமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கில்ஜித் பல்திஸ்தானில் உள்ள ஸ்கார்டு என்ற நகரத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், அதற்கேற்ப கார்கில் சாலையில் உள்ள எல்லை தடுப்பை பாகிஸ்தான் அகற்ற வேண்டும் என்றும் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவும், டோக்ரா மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் தங்கள் பகுதி இருந்ததையும், பல்திஸ் இன மக்களில் ஒரு பகுதியினர் தற்போது லடாக்கில் இருப்பதையும் சுட்டிக்காட்டும் கில்ஜித் பல்திஸ்தான் மக்கள், தாங்கள் மீண்டும் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், கில்ஜித் பல்திஸ்தான் மக்களை பாகிஸ்தான் இரண்டாம் தர மக்களாக நடத்துவதாகவும், தங்கள் நிலங்களை பாகிஸ்தான் ராணுவம் அபகரித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கில்ஜித் பல்திஸ்தான் பகுதியில் உள்ள நிலங்களை ராணுவம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முசாபராபாத் நகரில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கில்ஜித் பல்திஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா ஃபரூக் ஹைதர், பாதுகாப்புப் படையினர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவுடன் கில்ஜித் பல்திஸ்தான் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் பாகிஸ்தானை எதிர்த்தும், இந்தியாவை ஆதரித்தும் தொடர்ந்து பதிவுகளை இட்டு வருகின்றனர்.