;
Athirady Tamil News

பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் அசௌகரியம் – அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்ட பிரேசில் பெண்!!

0

க்ளிட்டோரியஸ் எனும் பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல.

இதற்கு மரபியல் தொடங்கி ஹார்மோன் குறைபாடுவரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

பிரேசிலில் உள்ள சாரா ஃபெடரல் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்துடன் இணைந்துள்ள அசிஸ் சாட்டௌப்ரியண்ட் மகப்பேறு பள்ளி, க்ளிட்டோரியஸ் அளவை சரி செய்யும் இரண்டு க்ளிட்டோரோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகளை அண்மையில் செய்தது.

அந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் ஒருவரான 22 வயதான மரியாவிடம்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி பேசியது.

மரியாவிற்கு பாலியல் உறவின்போது க்ளிட்டோரியஸின் அளவு பெரிதாகி மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதற்காக இந்த மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு முதல் ஹார்மோனல் சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறுகிறார் மரியா.

“18 வயதில் முதன்முறையாக உடலுறவு கொண்டபோது என்னுடைய க்ளிட்டோரியஸ் வழக்கத்திற்கு மாறாக பெரிதாவதைக் கண்டேன். இது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது” என்று மரியா பிபிசியிடம் கூறினார்.
தீர்வை நாடிய மரியா
இந்தப் பிரச்னையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த மரியா, ஒரு நாள் தன்னுடைய வழக்கமான பரிசோதனையின்போது க்ளிட்டோரியஸ் அளவைக் குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பெண்களுக்கான சிறப்பு மருத்துவரிடம் கேட்டார்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்தப் பிரச்னை மரியாவிற்கு மரபியல் ரீதியாக இருந்தது.

எல்லா நேரமும் எனக்கு இது பிரச்னையாக இல்லை. ஆனால், உடலுறவு கொள்ளும்போது
க்ளிட்டோரியஸ் வழக்கத்திற்கு மாறாக பெரிதாவதைக் கண்டேன். அதனால்தான் அதைக் குறைக்க நினைத்தேன் என்று கூறும் மரியா, அவரது பாலியல் துணை இது குறித்து எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை என்றும் இதன் காரணமாகத் தான் அதிகம் கஷ்டப்பட்டபோது அவர்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாகவும் கூறுகிறார்.

அதற்கான அறுவை சிகிச்சை மருத்துவர் அங்கு இல்லாததால் சில காலம் எடுத்தது.

ஸா பாலோவில் இருந்த பெண்களுக்கான சிறப்பு மருத்துவர் ஒருவர் இந்த சிகிச்சைக்காக ஏறக்குறைய 3,000கிமீ பயணித்து வருவதற்கு சம்மதித்ததால் கிறிஸ்துமஸ் மாலையில் மரியாவிற்கு அறுவை சிகிச்சை நடந்தது.

“அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்தது. நான் சிறப்பாகக் குணமடைந்து வருகிறேன். தற்போது முழுமையடைந்த பெண்ணாக வாழ்கிறேன். சிலருக்கு இது சிறிய பிரச்னையாகத் தெரியலாம். ஆனால், இதோடு வாழ்பவர்களுக்கு இது மிகவும் கடினம்” என்கிறார் மரியா.

க்ளிட்டோரியஸ் அளவு பெரிதாக இருப்பது பொதுவான குறைபாடுதான், இது நோயல்ல” என்கிறார், இந்த அறுவை சிகிச்சையைச் செய்த மருத்துவர் மார்செலோ
ப்ராக்செடெஸ் மான்டீரோ ஃபில்ஹோ.

“இதிலிருந்து குணமடைய இரண்டு மாத ஓய்வு தேவைப்படும். ஆனால், தற்போது நான் முழுமையடைந்த பெண். இனி உடலுறவின் போது நான் சங்கடப்படத் தேவையில்லை” என்கிறார் மரியா.

க்ளிட்டோரோபிளாஸ்டி என்றால் என்ன?
க்ளிட்டோரோபிளாஸ்டி என்பது க்ளிட்டோரியஸின் அளவைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை.

உடலுறவில் ஈடுபடும் போது இன்பத்தைத் தருவதற்காக க்ளிட்டோரியஸில் 8,000 நரம்பு முனைகள் உள்ளன.

சிறிய பொத்தான் போல இருக்கும் இந்த உறுப்பு, நபருக்கு நபர் அளவில் மாறுபடும்.

க்ளிட்டோரோமேகலி என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னைக்கான காரணங்களை மருத்துவர் ஃபில்ஹோ கீழே பட்டியலிடுகிறார்.
மரபியல் மாறுபாடு

ஆண்ட்ரோஜன் எனும் ஆண் ஹார்மோன் அதிகமாக சுரப்பது

உடல் தசையை வேகமாக அதிகரிக்க ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவது

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் பயன்பாடு

பல்வேறு காரணங்களால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம்

ஆண் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கட்டிகள்

பிசிஓஎஸ் என்றழைக்கப்படும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் போன்ற சில அரிதான நிகழ்வுகள்
பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோமில், ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்கள் அதிகரிப்பதாக ஃபில்ஹோ கூறுகிறார்.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் கர்ப்பம் தரிக்கும் வயதுடைய பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான நாளமில்லா நோயாகக் கருதப்படுகிறது. இது மாதவிடாயில் ஒழுங்கற்ற தன்மை, அதிகப்படியான உடல் முடி வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. சில தீவிரமான சூழலில் க்ளிட்டோரியஸ் அளவை பெரிதாக்குவதாக ஃபில்ஹோ கூறுகிறார்.

க்ளிட்டோரியஸ் எழுச்சி அடையும் போது அதிலிருக்கும் திசுக்கள் ரத்தத்தால் நிரம்பி இயற்கையாகவே அளவில் பெரிதாகிறது.

இது அனைத்து பெண்களுக்கும் நடக்கக்கூடியது. ஆனால், க்ளிட்டோரோமேகலி உடைய பெண்களுக்கு அதன் அளவு மேலும் அதிகரிக்கிறது.

வழக்கத்திற்கு மாறாக அளவு அதிகரிக்கும்போது உடலுறவின் போது அசௌகரியம் ஏற்படும்.

க்ளிட்டோரியஸிற்கு வரையறுக்கப்பட்ட அளவு உண்டா?
க்ளிட்டோரியஸிற்கு வரையறுக்கப்பட்ட அளவு இல்லை. எனவே உடலுறவின போது
அசௌகரியத்தை உணர்ந்தால் மருத்துவரிடம் செல்வது சிறந்தது.

“க்ளிட்டோரியஸ் அளவு பெரிதாக உள்ளதா இல்லையா என்பதை வைத்து நோயாளியை அளவிடக்கூடாது. உண்மையில், இது தனிநபர் சார்ந்தது. க்ளிட்டோரியஸ் அளவு சற்றுக் கூடுதலாக இருந்து எந்தவித அசௌகரியமும் இல்லை என்றால் எந்தப் பிரச்னையும் இல்லை“ என்கிறார் ஃபில்ஹோ.

You might also like

Leave A Reply

Your email address will not be published.