இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிள்கள் மீதான வரியை நீக்குங்கள்: அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்!!
அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிள்கள் மீதான வரியை நீக்க வேண்டும் என்று வாஷிங்டன் எம்பிக்கள் அதிபர் பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் மற்றும் வர்த்தக செயலாளர் ஜினா ரைமாண்டோவிற்கு வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த பிரதிநிதிகள் சபை எம்பிக்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் இரண்டு பேர் கடந்த 10ம் தேதி கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதத்தில், ‘‘அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க ஆப்பிள்கள் மீதான வரியை குறைப்பதற்கு உதவ வேண்டும்.
அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு இந்தியா அரசின் பதிலடி நடவடிக்கை காரணமாக பழ தொழில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. புதிய வரிகளை அமல்படுத்துவதற்கு முன்பு அமெரிக்காவின் இரண்டாவது ஏற்றுமதி சந்தையாக இந்தியா திகழ்ந்தது. ஆப்பிள்கள், செர்ரிகள் மற்றும் பேரிக்காய்களில் 30 சதவீதம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இந்திய அரசின் வரிகள் விதிப்பால் ஆப்பிள் விவசாயிகள் இந்திய சந்தையை இழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.