cவிமான போக்குவரத்து பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணமா? வெள்ளை மாளிகை மறுப்பு!!
அமெரிக்க விமான போக்குவரத்து பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள பெடரல் விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்றுமுன்தினம் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்களை அவசரமாக தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக விமான கண்காணிப்பு இணையதளம் கூறும்போது, அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டுக்கு செல்லும் விமானம் அங்கிருந்துவரும் விமானம் என 10,000 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. மேலும் 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று தெரிவித்துள்ளது. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சைபர் தாக்குதலால் தான் இந்த கோளாறு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறும்போது,‘‘ இதில் சைபர் தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை. அமெரிக்க பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். இதுகுறித்து முழு விசாரணை நடத்த போக்குவரத்து செயலாளருக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.