ஆந்திராவில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்து 2 பெண்கள் மரணம்!!

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், பார்சுரு பஜார் தெருவில் 5 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பில் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் ஆங்காங்கே சேதம் அடைந்து இருந்தது. சேதம் அடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணி நடந்து வந்தது.
பூவுல பாலத்தை சேர்ந்த மதுமோகன் தனது மனைவி ஸ்ரீவித்யாவுடன் (வயது 36), 2-வது மாடியில் குடியிருந்து வந்தார். முதல் மாடியில் அனுராதா (56) என்பவர் குடியிருந்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீவித்யாவும், அனுராதாவும் 2-வது மாடியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பால்கனி திடீரென சரிந்து கீழே விழுந்தது.
பால்கனியில் பேசிக் கொண்டிருந்த 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஸ்ரீவித்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்தவர்கள் அனுராதாவை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.