சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றம் !!
சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய – பசிபிக் மண்டலத்துக்கான தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. செலவினங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் கேப்பிட்டா க்ரீன் என்ற பிரம்மாண்டமான கட்டிடத்தில் தான் ட்விட்டரின் ஆசிய – பசிபிக் தலைமை அலுவலகம் இயங்கிவந்தது. இந்நிலையில் அங்குள்ள அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து பணி புரியமாறும் அடுத்த தகவல் வரும்வரை அதையே தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் தான் ஆசிய பசிபிக் மண்டலத்துக்கான முக்கிய ஊழியர்களில் ஒருவர் நூர் அசார் பின் அயோப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணியில் சேர்ந்த வெகு குறுகிய காலத்திலேயே பணி இழப்பையும் சந்திக்க நேர்ந்தது.
இத்தகையச் சூழலில் ஆசிய – பசிபிக் பிராந்திய தலைமை அலுவலகமே காலியாகிறது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையக கட்டிடத்திற்கான கடந்த மாத வாடகையை இன்னும் செலுத்தாததால் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல் சிங்கப்பூர் அலுவலகத்தை காலி செய்வதற்கும் வாடகை செலுத்தாததே காரணம் என்று கூறப்படுகிறது.