ஜனாதிபதி முதல், அதிகாரிகள் வரை வரியை சரியாக அறவிட வேண்டும்!!
நாட்டின் ஜனாதிபதி முதல் அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் நிதி சாரா அனுகூலங்கள் தொடர்பில் அறவிடப்படவேண்டிய வரியை (Tax on non- cash benefits) சரியாக அறவிடுவதற்கான முறைமையொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி. சில்வா அண்மையில் வலியுறுத்தினார்.
ஏதாவதொரு பதவி வகிக்கும் நபருக்கு நிதி சாரா அனுகூலங்களாக வாகனம், வீடு, பணியாளர்கள் போன்ற அனுகூலங்கள் கிடைப்பெறுவதால், அவை அனைத்தையும் கருத்திற் கொண்டு சரியாக இந்த வரி அறவீடு இடம்பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரி அறிவிடுவது பற்றிய வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அண்மையில் (10) அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் அறவிடப்பட்ட வரி சுமார் 860 பில்லியன் ரூபாய் எனவும் 2023 ஆம் ஆண்டில் சுமார் 1667 பில்லியன் ரூபாய் அறவிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் உளநாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 922 பில்லியன் ரூபாய் வரி இவ்வாண்டு பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் கூட்டிணைந்த வருமான வரி மூலமே அதிக நிதி கிடைக்கப்பெறவுள்ளது. அது 603 பில்லியன் ரூபாவாகும். அதேபோன்று, பெறுமதி சேர் வரி (VAT) மூலம் 553 பில்லியன் ரூபாய் வருமானம் பெற எதிர்பார்ப்பதாக உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிதி அறவிடும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வரி செலுத்தாமை தொடர்பில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெளிவுபடுத்தியது. இந்த சிக்கல்களை மதிப்பீடு செய்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள அரசாங்க நிதி பற்றிய குழு எதிர்காலத்தில் தலையிடுவதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இந்த வரி அறிவிடுவது தொடர்பான முன்னேற்றம் பற்றி பெப்ரவரி மாதத்தில் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் குழுவின் தலைவர் உளநாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தினார். அங்கவீன இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்துக்கும் வரி அறிவிடுவதாக வெளியான ஒருசில ஊடக அறிக்கைகள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. எந்தவகையிலும் ஓய்வூதியத்துக்கு அவ்வாறான வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2307/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அனுமதிப்பதற்காக குழுவில் சமர்பிக்கப்பட்டிருந்தது. விளையாட்டு உபகரணங்கள், புகையிரத உதிரிப்பகங்கள், அலங்காரத் துறைசார்ந்த ஒரு சில பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்துவதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கிய குழு, சுற்றுலா, அலங்காரத்துறை போன்ற துறைகளுக்கு தேவையான தயாரிப்புக்களை உரிய நிறுவங்களின் பரிந்துரையின் அடைப்படையில் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்குவதை விட, அதிக வரி விதித்தாவது இறக்குமதிக்கு இடமளிப்பது பொருத்தமானது என தெரிவித்தது. அவ்வாறில்லை எனில் கருப்பு சந்தை உருவாகுவதைத் தடுக்க முடியாமல் போகும் என குழுவில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், 2308/51 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு செலவனிச்ச சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர்களான (கலாநிதி) சுரேன் ராகவன், பாரளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, சஹன் பிரதீப் விதான மற்றும் மதுர விதானகே ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.