மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய வாலிபருக்கு அபராதம் !!
வடக்கு இங்கிலாந்து பகுதியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடியபடி நடந்து சென்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார்.
அவை மன்னர் மீது விழவில்லை. தரையில் விழுந்து உடைந்தன. ‘இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல…’ என்று அந்த நபர் கோஷமிட்டார். மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மன்னர் மீது முட்டைகளை வீசிய ஹாரி மே (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின்போது, அந்த வாலிபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 85 பவுண்டுகள் செலுத்தும்படி நிதிபதி உத்தரவிட்டார். ஒருவருடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வழி, இதுபோன்று பொருட்களை வீசுவது அல்ல என நீதிபதி கண்டித்தார்.