“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணி செய்யவிடமால் தடுப்பது தீங்கானது”: அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கு!!
சிறுசிறு ஆதாயங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணி செய்யவிடமால் தடுப்பது மக்களுக்கு, ஜனநாயகத்திற்கு, அரசியலமைப்புக்கு எதிரானது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு விளம்பரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறிவிட்டதாக கூறி, அரசு பணத்தில் அரசியல் விளம்பரம் செய்ததற்தாக ரூ.164 கோடியை 10 நாட்களுக்குள் திருப்பி தரவேண்டும் என்று டெல்லி தகவல் மற்றும் விளம்பரத்துறை இயக்குநரம் புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் இது தொடர்பாக டெல்லி தலைமைசெயலருக்கு துணைநிலை ஆளுநர் கடந்த மாதம் அளித்த உத்தரவின் படி அனுப்பபட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி முதல் தமிழகம் வரை எதிர்கட்சிகள் ஆளும் மாநில ஆளுநர்களின் செயல்பாடு குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான பத்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால்,”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பணிசெய்ய விடுங்கள். சிறு சிறு ஆதாயங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பணி செய்யவிடாமல் தடுப்பது மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரத்தில் டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் குறித்த வேறு ஒரு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, “நிர்வாகப் பணிகள் அனைத்தும் மத்திய அரசின் விருப்பத்தின் படிதான் நடக்க வேண்டும் என்றால் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருப்பதன் நோக்கம் என்ன?” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கிடையில், பாஜக ஆளாத மாநிலங்களில் மத்திய அரசு ஆளுநர்களின் மூலம் அதிகாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அண்மையில் தமிழகத்திலும் ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் விவகாரம் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வரை எட்டியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நடந்த ஆளுநர் உரையின் போது அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்திருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.