பிரதமர் மோடியை சுவாமி விவேகானந்தருடன் ஒப்பிட்ட மேற்குவங்க பாஜக எம்.பி: திரிணமூல் அதிருப்தி!!
பிரதமர் நரேந்திர மோடியை சுவாமி விவேகானந்தரின் மறு அவதாரம் என்று விமர்சித்த மேற்குவங்க மாநில பாஜக எம்.பி., சவுமித்ரா கானின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது..
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட எம்.பி. சவுமித்ரா கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சுவாமி விவேகானந்தர் இறைவனுக்கு சமம். சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் நரேந்திர மோடி உருவில் மீண்டும் அவதரித்துள்ளார். இன்று நம் பிரதமர் தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் வாழும் விதம் அவர் தான் நவீன இந்தியாவின் சுவாமிஜி என்ற உணர்வைத் தருகிறது. தனது தாயை இழந்தபோதும் கூட அவர் நாட்டுப் பணியாற்றினார் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவரது கருத்து மேற்குவங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அதிருப்தி அடையச் செய்துள்ளது. சவுமித்ராவின் கருத்து சுவாமி விவேகானந்தருக்கும் அவருடைய கருத்துகளையும் அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளது. விவேகனந்தரின் கொள்கை பாஜக கொள்கைக்கு முற்றிலும் எதிரானது என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எனினும் சுவாமி விவேகானந்தருடம் பிரதமர் மோடியை ஒப்பிடுவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே பாஜக எம்.பி. நித்யானந்த் ராய், பிரதமர் நரேந்திர மோடியை சுவாமி விவேகானந்தரின் மறுபிறவி என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக நேற்று சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “விவேகானந்தரின் வாழ்க்கை ஆன்மிகம், தேசப்பற்று, அர்ப்பணிப்பு ஆகியனவற்றை அவரை பின்பற்றுவோர் வாழ்க்கையில் விதைக்கும்” என்று கூறியிருந்தார்.