காசி தமிழ்ச் சங்கமம் – இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் தொடக்கம்: பியூஷ் கோயல்!!
புனித நகரமான காசியில், பெருமைமிகு தமிழ் கலாச்சாரம் குறித்து ஒரு மாத காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டது. உலகில் பழமையான நகரமான காசி மற்றும் தமிழ்நாட்டில் மக்கள் பழமையான மொழிகளை பேசி வருகின்றனர். கலைகள், இசை, கைவினைத் தொழில், தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றின் பழமையான கலாச்சாரங்களை இருபகுதிகளும் கொண்டுள்ளன. இவை பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து வருகின்றன.
சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக காசியில் வாழ்ந்த தமிழ் துறவிகள் குறித்து வடஇந்திய மக்கள் சிலரே அறிந்துள்ளனர். அதேபோல் தமிழ் திருமணங்களில் நடத்தப்படும் காசி யாத்திரை குறித்தும் சிலரே தெரிந்து வைத்துள்ளனர். இதேபோன்று இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையிலான பழமையான தொடர்புகள் குறித்து தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக அறியவில்லை. இதையடுத்து இருபகுதி மக்கள் இடையே இணைப்பை வலுப்படுத்த ஒரு மாத கால காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், ஆன்மிக தலைவர்கள், கலைஞர்கள், வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள்,மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துதரப்பினரும் காசிக்கு வந்தனர். அங்கு அவர்கள் பழமையான நகரின் பாரம்பரியம் குறித்து அறிந்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை தரிசித்தனர். அதேபோல் நவீன சிந்தனை, தத்துவம், தொழில்நுட்பத்துடன், நமது பாரம்பரியம் மற்றும் பழமையை ஒருங்கிணைத்து மீட்பதற்கான தனித்துவமான தளத்தை சங்கமம் உருவாக்கியது.
பனராஸ் பட்டு சேலைகளுக்கு புகழ்பெற்ற இடமாக வாரணாசி திகழ்கிறது. பழமையான மற்றொரு நகரமான காஞ்சிபுரம் பளபளக்கும் பட்டுச் சேலைகளுக்கு புகழ் பெற்று விளங்குகிறது.
இரு பகுதிகளையும் சேர்ந்த நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒருவருக்கொருவர் சந்தித்து தரக்கட்டுப்பாடு, சந்தைப்படுத்துதல், உற்பத்தியின் உறுதித்தன்மை, நவீன இயந்திர உபயோகம், மதிப்புக் கூட்டுதல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் குறித்து தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் ஜவுளி மாநாட்டிற்கு மோடி அரசு ஏற்பாடு செய்திருந்தது. அமிர்தகால தொலைநோக்கு 2047 கருத்தரங்கின் போது தமிழ்நாடு மற்றும் காசியைச் சேர்ந்த ஜவுளித் தொழில்துறையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.2030-ம் ஆண்டுக்குள் ஜவுளித் துறை ஏற்றுமதியை 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் தொலைநோக்கு பார்வை குறித்தும் இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுவது குறித்தும் நம்பிக்கையுடன் மகிழ்ச்சி கொண்டனர்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக விளங்கும் ஜவுளித்துறை, நமது நாடு 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு, முக்கியப் பங்கு வகிக்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்திய ஜவுளித்துறை உற்பத்தி சுமார் 2 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு 12 முதல் 13 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் ஏற்றுமதி இரட்டை இலக்கத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாவட்டம், ஒரு பொருள் திட்டத்தை நாம் தீர்க்கத்துடன் ஊக்கப்படுத்துவதன் மூலம் இந்தியப் பொருட்கள் உலகச் சந்தையை அடையும். இந்தப் பொருட்களுக்கான மிகப்பெரிய தூதராக பிரதமர் விளங்குகிறார். சர்வதேச கூட்டங்களில் உலகத் தலைவர்களுக்கு இப்பொருட்களை அவர் பரிசாக வழங்குகிறார். காஞ்சிபுரம் மற்றும் வாரணாசியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் போன்ற பொருட்களுக்கு இடையே மரபொம்மைகளும் சங்கமத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. வாரணாசியின் பாரம்பரியமான மரபொம்மைகள் மோடி அரசின் முன்னெடுப்புடன் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை பெறுகின்றன. துபாய்போன்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அவை காட்சிப்படுத்தப்படுகின்றன.
மின்னணு வர்த்தகத்துக்கான திறந்தவெளி கட்டமைப்பு போன்ற அரசின் இதர முன்னெடுப்புகள் மூலம் பாரம்பரிய பொருட்களுக்கு பெரிய ஊக்கம்கிடைக்கிறது. மத்திய அரசின் மின்னணுசந்தை தளம் நியாயமான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற மற்றும் சிறந்த பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வகை செய்துள்ளது.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, கடந்த டிசம்பர் 16-ம்தேதி சுமுகமாக நிறைவுபெற்றது. சுமார்2 லட்சம் மக்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று கலாச்சார நிகழ்ச்சிகள், புகழ் பெற்றகண்காட்சிகள் ஆகியவற்றை கண்டுகளித்தனர். கண்காட்சியில் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் உணவுகள் இடம் பெற்றிருந்தன.
இந்த சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையிலான இணைப்பு என்பதோடு மட்டுமல்லாமல், இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் தொடக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதும் உண்மையே.