இந்தியாவில் வலுவான போக்குவரத்து வசதி அவசியம் – உலகின் நீண்ட தூர கங்கா விலாஸ் கப்பல் பயணத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு!!
வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகர் வரை செல்லும் ‘எம்.வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகருக்கு சொகுசு கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற சொகுசு கப்பல் கொல்கத்தாவில் தயா ரிக்கப்பட்டது. இந்த கப்பலை ‘ஹெரிடேஜ் ரிவர்ஸ் ஜர்னிஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது. உலகிலேயே ஆற்றில் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் கப்பல் இதுதான்.
இந்த கப்பலில் வாரணாசியில் இருந்து திப்ரூகர் செல்ல 52 நாட்கள் ஆகும். 3,200 கி.மீ-க்கும் மேற்பட்ட தூரம் இந்த கப்பல் செல்கிறது. இதன் வழியில் உ.பி., பிஹார், ஜார்க்கண்ட், அசாம் மேற்கு வங்கம் என 5 மாநிலங்களும், அண்டை நாடான வங்கதேசமும் வருகின்றன. இங்குள்ள உலகபாரம்பரிய நினைவுச் சின்னங்கள், தேசியப் பூங்காக்கள், படித்துறைகள், பிஹாரின் பாட்னா , ஜார்கண்ட்டின் சாகிப்கன்ச், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, வங்கதேசத் தலைநகர் தாகா, அசாம் மாநிலத்தின் குவஹாதி நகரங்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களை இந்த கப்பலில் செல்லும் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.
கொல்கத்தாவுக்கு சென்றபின் இக்கப்பல், வங்கதேசத்தின் தாகா துறைமுகம் செல்லும். அங்கிருந்து கங்கா விலாஸ் கப்பல் பிரம்மபுத்ரா நதி வழியாக அசாம் மாநிலத்தில் நுழைந்து திப்ரூகர் அடைகிறது. இந்த கப்பலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் கங்கை கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘டென்ட் சிட்டி’-யையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பிஹார், மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்து திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் எம்.வி கங்கா விலாஸ் கப்பல் பயணத்தை தொடங்கி வைத்து காணொலி மூலம் சுற்றுலா பயணிகளிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
வளர்ந்த இந்தியாவை உருவாக்க வலுவான போக்கு வரத்து இணைப்பு வசதிகள் அவசியம். காசியிலிருந்து திப்ரூகர்வரையிலான கப்பல் சேவை தொடக்கம் உலக சுற்றுலா வரைபடத்தில் வட இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை முன்னணியில் இடம்பெறச் செய்ய உதவும். தற்போது இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டு பிராந்தியம், மதம்,நாடு என்ற வேறுபாட்டை களைந்துள்ளது. அனைத்துப் பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இந்தியா வரவேற்கிறது. இது, நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
நாட்டில் 5 தேசிய நீர்வழிப் பாதைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 111 தேசிய நீர்வழிப்பாதைகள் உள்ளன. அதேபோன்று, முன்பு 30 லட்சம் டன்னாக இருந்த நதி நீர்வழியான சரக்குப் போக்குவரத்து தற்போது 3 மடங்கு உயர்வு கண்டுள்ளது.
இந்தியாவில் 125-க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன. எனவே, அவற்றை சரக்குகளை கொண்டு செல்வதற்கும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீர்வழிப்பாதைகள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல, பணத்தையும் சேமிக்கவும் உதவுகின்றன. இவற்றை இயக்குவதற்கான செலவுசாலைப் பாதைகளை விட இரண்டரை மடங்கு குறைவு. அதேபோன்று ரயில் சேவையுடன் ஒப்பிடுகையில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே நீர்வழித்தட போக்குவரத்துக்கு செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கங்கா விலாஸ் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதன் மூலம், உலக சுற்றுலா வரைபடத்தில் கிழக்கு இந்தியா மேலும் பிரபலமடையும். கங்கை ஆற்றில் சொகுசுகப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது முக்கியமான தருணம். இந்திய சுற்றுலாவில் இது புதியயுகத்தை அறிவிக்கிறது. இந்தியாவில் எல்லாமே உள்ளது. உங்கள் கற்பனைக்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் உள்ளன. இந்தியாவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதன் அனுபவத்தை மனதால் மட்டும் உணர முடியும். மத பாகுபாடின்றி இந்தியா எப்போதும் தனது மனதை அனைவருக்கும் திறந்து வைத்துள்ளது.
நாட்டின் கலாச்சாரத்தை தொடர்புபடுத்தவும், பன்முகத்தன்மையின் அழகான அம்சங்களை கண்டறியவும் இந்த 51 நாள் கப்பல் பயணம் தனிச்சிறப்பான வாய்ப்பு. இவ்வறு அவர் கூறினார்.
100 ஹெக்டேரில் ‘டென்ட் சிட்டி’
வாரணாசி வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கங்கை நதிக்கரையில், படித்துறைகளுக்கு எதிர்புறத்தில் ராம் நகரை நோக்கி 100 ஹெக்டேர் நிலப் பகுதியில் ‘டென்ட் சிட்டி’ (கூடாரங்கள் நகரம்) உருவாக்கப்பட்டுள்ளது. தேவ் தீபாவளி, மகா சிவராத்திரி போன்ற நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும்போது, அவர்கள் தங்குவதற்காக இந்த கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 பேர் தங்கும் வகையில் இந்த டென்ட் சிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன தங்கும் விடுதியில் உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், ரான் ஆப் கட்ச் என்ற இடத்தில் தார் பாலைவனப் பகுதியிலும், ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியிலும் இது போன்ற டென்ட் சிட்டி உள்ளது.