ஆந்திராவில் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.30 கூடுதலாக தராததால் திருப்பி எடுத்து சென்ற ஊழியர் !!!
ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தை சேர்ந்த நுகர்வோர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர் பதிவு செய்து இருந்தார். கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது ஊழியர் கியாஸ் விலையை விட ரூ.30 கூடுதலாக கொடுக்க வேண்டும் என நுகர்வோரிடம் கேட்டார். அதற்கு நுகர்வோர் ரூ.30 கூடுதலாக தர முடியாது என கூறியதால் ஊழியர் மீண்டும் கியாஸ் சிலிண்டரை ஏஜென்சிக்கு கொண்டு சென்றார்.
இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் குடிமை பொருள் வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அங்கு இருந்த அதிகாரிகள் கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஏஜென்சியிலிருந்து சிலிண்டர் வழங்கப்படும் என கூறி வேறு ஒரு ஏஜென்சிக்கு நுகர்வோர் பெயரை மாற்றினார்.
இதனால் ஒரு வாரத்திற்கு மேல் கியாஸ் சிலிண்டர் இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் அவதி அடைந்த நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் ஆணையத்தில் புகார் செய்தார். நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா விசாரணை நடத்திய போது, நுகர்வோரிடம் கூடுதல் பணம் கேட்ட ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதால் வழக்கை கைவிட வேண்டுமென தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் நுகர்வோரிடம் சிலிண்டர் விலை விட கூடுதலாக பணம் கேட்டது உங்கள் ஏஜென்சியை சேர்ந்த ஊழியர். அதனால் அவர் செய்த குற்றத்திற்கு நீங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா உத்தரவு பிறப்பித்தார்.