ஐதராபாத்தில் ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது!!
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஐதராபாத்தில் இடத்தை வாங்கி வீடு கட்ட உள்ளதாக தனது நண்பர்களிடம் தெரிவித்து இருந்தார். இது குறித்து ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள சுதாகருக்கு தெரியவந்தது. வெளிநாட்டில் உள்ள நபரை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி ஐதராபாத்தில் ரூ.5 கோடியில் குறைந்த விலையில் இடத்தை வாங்கி தருவதாகவும் முன்பணமாக ரூ.50 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
தனது நண்பரான ராஜேஷ் என்பவர் மண்டல வருவாய் துறை அலுவலராக உள்ளதாகவும், அவரிடம் பேசி நிலத்தை முடித்து தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வெளிநாட்டில் வாழும் நபர் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் நிலத்தை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த வெளிநாட்டில் வாழும் நபர் இதுகுறித்து வனஸ்தலிபுரம் போலீசில் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் மீது புகார் செய்தார்.
புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில் இன்ஸ்பெக்டர் சுதாகர் ரூ.50 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுதாகரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர் ராஜேஷை தேடி வருகின்றனர். பண மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.