சமத்துவ பொங்கல் விழா- ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் கவுன்சிலர்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் அலங்காரம் செய்து, ஆங்காங்கே கரும்புகள் வைக்கப்பட்டு இருந்தது. தாரை, தப்பட்டையும் இசைக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகம் விழா கோலம் பூண்டது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன. அனைவரையும் வரவேற்று கோலப்பொடியால் எழுதப்பட்டு இருந்தது.
அப்போது திரைப்பட பாடல்களும் இசைக்கப்பட்டன. சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடல் திடீரென இசைக்கப்பட்டது. இந்த பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார்.
இதை சக பெண் கவுன்சிலர்கள் கைதட்டி வரவேற்றனர். அவரோடு மற்றொரு சிறுமியும் சேர்ந்து நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். அவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சுகாதார ஆய்வாளர் ஒருவரும் தப்பாட்டத்துக்கு நடனமாடினார்.