69 இலங்கையர்கள் தரையிறங்கினர்!!
கடந்த 24ஆம் திகதி ரீயூனியன் தீவில் தரையிறங்கிய 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் 69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ளனர்.
இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் இன்று காலை தீவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
13 முதல் 53 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே 69 பேருடன் சென்ற மற்றொரு படகு குறித்த தீவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச் மற்றும் 2019 ஏப்ரலுக்கு இடையில், இலங்கையிலிருந்து 275 பேர் ரீயூனியனுக்கு சென்றுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து நான்கு கப்பல்கள் மொத்தம் 122 பயணிகளுடன் தீவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரி விண்ணப்பித்த 397 புலம்பெயர்ந்தவர்களில் 121 பேர் பிரான்ஸுக்கு சொந்தமான தீவில் இருக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.