குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு விதி மீறல் – பெண் பொறியாளர் பணியிடை நீக்கம்!!
ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்பு விதியை மீறிய பெண் பொறியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தானின் பாலி நகரில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. பொது சுகாதார பொறியியல் துறையின் இளநிலை பெண் பொறியாளரான அம்பா சியோல் இதில் பங்கேற்றார். பாலி நகரில் பணியாற்றும் இவர், நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவரின் பாதத்தைத் தொட முயன்றுள்ளார். குடியரசுத் தலைவரை அவரது அனுமதி இன்றி தொடும் நோக்கில் யாரும் நெருங்கக் கூடாது என்ற விதியை அவர் மீறியதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், அம்பா சியோல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடிநீர் விநியோக நிர்வாகத் துறையின் தலைமை பொறியாளர் இதற்கான உத்தரவினை கடந்த 12-ம் தேதி பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் பாதத்தைத் தொட முயன்ற அரசு பெண் பணியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.