கவர்னர் உரை விவகாரம்- மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை உள்துறைக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்தார்!!
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார். இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதற்கிடையே சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கொடுத்தனர்.
அக்கடிதத்தில் அரசியல் சாசன பகுதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அவர் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதுபற்றி பார்ப்பதாக தி.மு.க. குழுவினரிடம் தெரிவித்தார். கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.