;
Athirady Tamil News

அரியானாவுக்கு சென்று ‘ஜம்தாரா’ ஆன்லைன் கொள்ளையர்களை கைது செய்த சென்னை பெண் போலீஸ் !!

0

விதவிதமாக யோசிக்கிறாங்க… சுதாரிப்பாக இருந்தாலும் பணத்தை பிடுங்கி விடுகிறார்கள்…. பரங்கிமலையைச் சேர்ந்த அனந்தராமன் என்பவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதில் ரூ. 12 செலவில் மின் கட்டணம் செலுத்தலாம். இந்த லிங்கை கிளிக் செய்தால் போதும் என்று மின் வாரிய அறிவிப்பு போலவே அந்த அறிவிப்பு இருந்தது. அதை பார்த்ததும் வேலை எளிதாகி விட்டதே என்று அனந்தராமனும் ‘கிளிக்’ செய்து கேட்ட விபரங்களை எல்லாம் பதிவு செய்துள்ளார். அடுத்த கணமே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 915-ஐ சுருட்டி விட்டார்கள். அதிர்ந்து போன அனந்தராமன் சைபர் கிரைம் போலீசில் சென்று முறையிட்டுள்ளார்.

இதே போல் பெண் ஒருவருக்கு தனியார் வங்கியின் அறிவிப்பு என்று குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் கே.ஒய்.சி. விபரங்களை இணைக்கவில்லை. உடனடியாக இணையுங்கள் இல்லாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும். இணைப்புக்கு கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். உடனே அந்த பெண்ணும் லிங்கை கிளிக் செய்து விபரங்களை பதிவு செய்துள்ளார். மறுகணமே அவரது வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் சுருட்டப்பட்டது. அந்த பெண்ணும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரை பார்த்ததும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தனது விசாரணையை தொடங்கி இருக்கிறார். அப்போது செல்போன் இணைப்புகளை ஆய்வு செய்தபோது அரியானா மாநிலத்தில் உள்ள ஜம்தாரா தான் கொள்ளைக்கு மையப்புள்ளியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இங்குதான் ஆன்லைன் மோசடிகளை அரங்கேற்றுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதையடுத்து கவிதா தலைமையில் அரியானாவுக்கு புறப்பட்டனர். அங்கு முகாமிட்டு இருந்த போலீசார் உள்ளூர் போலீஸ் உதவியுடன் குறிப்பிட்ட செல்போன்கள் ஜம்தாராவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மஞ்சித்சிங், நாராயண் சிங் ஆகிய இருவரது வீடுகளையும் சுற்றி வளைத்தனர். வீட்டு முன்பு தமிழ்நாடு போலீசார் வந்து நின்றதை பார்த்ததும் 2 பேரும் அதிர்ந்து விட்டனர். எப்படியெல்லாம் திட்டம் போட்டு நடத்தினோம்? அப்படியும் கண்டு பிடித்து விட்டார்களே என்று அவர்களுக்கு ஆச்சரியம். இருவரையும் ஜம்மென்று தூக்கி உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சென்னைக்கு கொண்டு வந்தனர். கைதான இருவரில் நாராயண்சிங் நகைக்கடை ஏஜெண்டாகவும், ரஞ்சித்சிங் எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் பணியாற்றுபவர்கள்.

இவர்கள் நாடு முழுவதும் ‘நெட்வொர்க்’ வைத்துள்ளார்கள். அவர்கள் மூலம் செல்போன் எண்களை பெற்று இவ்வாறு போலியான தகவல்களை அனுப்பி வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை சுருட்டி விடுகிறார்கள். இதுவரை 75 லட்சத்துக்கும் மேல் மோசடியாக பணத்தை சேர்த்துள்ளார்கள். ஒரு வேளை போலீஸ் துப்பு துலக்கி வந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைத்து தனது கணக்குக்கு வரும் பணங்களை நகை கடனுக்கும், கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனுக்கும் வங்கி கணக்கில் இருந்து மாற்றி விடுவார்களாம். இதை கண்டு பிடித்த போலீசார் அவர்களி டம் இன்னும் ஏமாந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார்களோ என்று தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.