பொங்கல் விழாவில் பறை அடித்து ஆடிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு !!
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி பயிற்சி படை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுடன் பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டார். அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணியின் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் ஜெயராம், மற்றும் ஆயுதப்படை காவல்துறை தலைவர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நுழைவாயிலில் கரும்பு வாழை, தோரணங்களுடன் சிறப்பாக அலங்கரிக்கப்படிருந்தது.
மேளம் நாதஸ்வரம், பேண்ட் வாத்தியம் என பொங்கல் திருவிழா களை கட்டியது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பறை இசை கலைஞர்கள் வாத்தியத்தை இசைத்தபடி நடனமாடினார்கள். அதை பார்தததும் டி.ஜி.பி.சைலேந்திர பாபுவும் பறையை வாங்கி அடித்தபடி கலைஞர்களுடன் ஆடினார். 10 நிமிடங்களுக்கும் மேல் அவர் ஆடி அசத்தினார்.
நிகழ்ச்சியில் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மல்லர் கம்பம் ஏறுதல், ரங்கோலி கோலம் போட்டிகள், பரதநாட்டியம் குழுவினரின் நடன நிகழ்ச்சி, பறை இசை, கரகம் குழுவினர் நிகழ்ச்சி, ஏரோபிக்ஸ் நடனம், சிறுவர் நிகழ்ச்சி, கிராமிய நடனம், சிலம்பம் மற்றும் வால்வீச்சு உள்ளிட்ட தமிழ்நாடு பண்பாட்டின் வீர சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண் போலீசார் பட்டுவேட்டி-சட்டை, பெண் போலீசார் பட்டு புடவையில் கலந்து கொண்டனர்.