அடுத்தடுத்து ஒலித்த சைரன் உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்: பயங்கர அழிவுக்கு ரஷ்யா திட்டம்!!
உக்ரைன் தலைநகர் கீவ்வில் தொடர் ஏவுகணை தாக்குதலால் அடுத்தடுத்து சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டுள்ளது.
நேற்று முன்தினம் ரஷ்ய ராணுவம், டோனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள சோலேதார் நகரை கைப்பற்றிய நிலையில், தலைநகர் கீவ்வில் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தியது. கீவ்வின் டெனிப்ரோவ்ஸ்கை மாவட்டத்தில் தொடர் ஏவுகணை தாக்குதலால் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமானதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணை தலைவர் டைமோசென்கோ டெலிகிராமில் தகவல் வெளியிட்டுள்ளார்.
தொடர் தாக்குதலால் சைரன்கள் தொடர்ந்து ஒலித்ததன் காரணமாக கீவ்வின் பல பகுதிகளிலும் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, கீவ்வில் பயங்கர அழிவை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருப்பதாக அந்நகர மேயர் கிலிட்ஷிகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.