பெப்ரவரி 1 இல் 1 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
பிரிட்டனில், வேலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்ரவரி 1 ஆம் தேதி ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பிரிட்டனின் மிகப் பெரிய வர்த்தக அமைப்புகளில் ஒன்றான பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பின் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
வேலை பாதுகாப்பு, வேலை நீக்க விதிமுறைகள், ஓய்வூதியம், சம்பள விகிதம் உள்ளிட்டவற்றில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி “124 அரசுத் துறைகள் மற்றும் பிற அமைப்புகளில் உள்ள ஒரு லட்சம் ஊழியர்கள் பெப்ரவரி 1 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,” என்றும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் “அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள்.
இந்த அமைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் பிறதுறையை சார்ந்த ஊழியர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு லட்சம் ஊழியர்கள் பெப்ரவரி 1 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று அந்த அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் காலத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளால் அடிக்கடி போராட்டங்கள் நடந்தது. வளர்ந்து வரும் விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்தவும் பட்ஜெட் பற்றாக்குறையை அகற்றவும் தவறியதாலும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் அவர் பதவி விலகினார்.
இதையடுத்து 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வரி உயர்வு உள்ளிட்ட சில கடுமையான நடவடிக்கைகளை சமீபத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் திரளும் மிகப் பெரிய மக்கள் போராட்டம் இதுவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என பொய்யாக கூற விரும்பவில்லை. ஆனால், இந்த 2023 ஆம் ஆண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.