சமூகத்தில் பிரிவினையை தூண்டும் சேனல்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு!!
வடஇந்தியாவை சேர்ந்த சுதர்சன் நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனல், யுபிஎஸ்சி ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேபோல அரசியல் தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள், சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டுவது உள்ளிட்டவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி நாகரத்னா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் நிசாம் பாஷா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அவர்கள் கூறும் போது, “தொலைக்காட்சி சேனல்கள் வெறுப்புணர்வு, பிரிவினையை தூண்டும் வகையில் நிகழ்ச்சி, செய்திகளை ஒளிபரப்பு செய்துவருகின்றன. இதை தடுக்க கேபிள்டிவி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும்போது, “ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டை பின்பற்றி வருகின்றன. தேசிய நலன், தேசத்தின்பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும்போது மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. அரசியல் தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுக்க சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பான சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.