;
Athirady Tamil News

இந்தி மொழி இருக்கை ஸ்தாபிக்க ஒப்பந்தம்!!

0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் இந்திமொழி இருக்கையினை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தது.

அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.எம்.யு.எஸ்.கே. ரத்நாயக்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே கடந்த 11ஆம் திகதி பெலிஹுலோயாவில் உள்ள சப்ரகமுவ பல்கலைக் கழகத்துக்கு முதன்முதலாக விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய பேராசிரியர்களும் இப்பல்கலைக் கழகத்தில் இந்தி மொழிக் கற்கைநெறியினை கற்பிக்க வழிசமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் இந்திமொழி இருக்கையில் சிறந்த பெறுபேறுகளைப்பெறும் மாணவருக்கு உயர் ஸ்தானிகரின் தங்கப்பதக்கம் வழங்கப்படுமெனவும் உயர் ஸ்தானிகர் இங்கு அறிவித்திருந்தார்.

மேலும், கண்டியில் உள்ள உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இப்பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட இந்தி கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களும் உயர் ஸ்தானிகரால் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் பீடத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக விஞ்ஞான மற்றும் மொழிகளுக்கான சர்வதேச மாநாட்டிலும் உயர் ஸ்தானிகர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

புலமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படும் இம்மாநாட்டில் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் குறித்த தமது ஆய்வுகளை அவர்கள் சமர்ப்பிக்கமுடியும். அத்துடன் இந்த மாநாட்டுக்கான இணையசேவையும் உயர் ஸ்தானிகர் மற்றும் துணைவேந்தரால் இந்நிகழ்வின்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் இந்தியாவின் சாதனைகளை பட்டியிலிட்டிருந்தார்.

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களை மேற்கோளிட்டு உரையினை தொடர்ந்த அவர் மீள்பாவனை, மீள்சுழற்சி, மீள்வடிவமைப்பு, மீள்பயன்பாடு, மீளுற்பத்தி போன்றவை இந்தியாவின் கலாசார நெறிமுறையின் அங்கங்களாக ஸ்திரத்தன்மையினை நோக்கிய பயணத்தில் எவ்வாறான முக்கியத்துவத்தினைக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஸ்திரமான எரிசக்தி மூலங்களிலிருந்து அதிக சக்தியை உற்பத்தி செய்வதற்காக இந்தியா இலங்கையில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், இப்பல்கலைக்கழகத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் உறுதியளித்தார்.

இந்தியா இலங்கை இடையிலான ஒத்துழைப்பில் கல்வி மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அண்மையில் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் தனது முதுமாணிக்கற்கை நெறிகளை இலங்கை தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் பட்டப்படிப்பு முதல் முனைவர் கற்கைநெறிகள் வரையிலான பல்வேறு கற்கைகளுக்காக பலநூற்றுக்கணக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், இலங்கையில் தமது கல்வியினைத் தொடர்வதற்காக பொருளாதார ரீதியில் நலிவடைந்த மாணவர்களுக்கும் நிதி ஆதரவு வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.