பாலமேடு ஜல்லிக்கட்டு.. 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி.. சோகத்தில் மதுரை! (படங்கள்)
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி அதிக காளை அடக்கிய வீரர்கள் பட்டியலில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் முன்னணியில் இருந்தார். இதனிடையே காளை ஒன்று முட்டி தூக்கியதில், வயிற்றில் பலத்த காயமடைந்த அரவிந்த்ராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று பகுதிகள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றது. இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்த நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதனைதொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகள் அடக்கும் பணியில் காளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9 காளைகளை அடக்கிய அரவிந்த்ராஜ்
இதனிடையே காளை முதலே அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் பட்டியலில் பாலமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் முன்னணியில் இருந்தார். 9 காளைகளை அடக்கி இருந்த அரவிந்த்ராஜ், அடுத்த காளையை அடக்குவதற்காக வாடிவாசல் அருகே காத்திருந்தார். அப்போது, திடீரென வாடிவாசலில் இருந்து வேகமாக வெளியே வந்த காளை ஒன்று, அரவிந்த்ராஜின் வயிற்றில் முட்டித் தூக்கியது.
குத்தி தூக்கிய காளை
இதில் வயிற்றில் கொம்பு குத்தியதில், பலத்த காயம் ஏற்பட்டு, அங்கேயே சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவக் குழுவிடம் கொண்டு செல்லப்பட்டார். அப்போது வயிற்றில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக மேல் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கதறி அழுத தாய்
அரவிந்த்ராஜிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸில் ஏற்றிய போது அவருடைய தாய், கதறி கதறி அழுதார். தாய் கதறி அழுதது காண்போர் அனைவரையும் நிலைகுலைய செய்தது. தொடர்ந்து அரவிந்த்ராஜிற்கு எதுவும் நடக்காது என்று அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே அரவிந்த்ராஜ் உயிரிழந்தார்.
30 பேர் காயம்
இது மதுரை மக்களுக்கு மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 8 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 9 பேர், காவலர் ஒருவர், பத்திரிகையாளர் உட்பட 30 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.