நண்பனின் உடலை பார்க்க வந்துவிட்டு.. சடலமாக திரும்பிய 3 பேர்.. விமான விபத்தில் சோகம்.. கலங்கும் கேரளா!! (படங்கள்)
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்டு பொக்கராவில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 68 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளாவில் தங்களுடைய நண்பனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய மூன்று பேரும் இந்த விமான விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்மாண்டுவிலிருந்து பொக்கராவுக்கு சுமார் 200 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் Yetti விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ATR 72 எனும் இரட்டை என்ஜின் விமானம் ஒன்று பொக்கராவுக்கு புறப்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகள் 4 பணியாளர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்தனர். விமானம் திட்டமிட்டபடி பொக்கரா விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஆனால் விமானம் இறங்கிய வேகத்தில் ஓடுபாதையைவிட்டு விலகி சென்று அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் உடனடியாக விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்த விமான நிலைய தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர் ஆனால் விமானம் முழுமையாக எரிந்து எலும்புக்கூடானது.
மீட்பு பணி பின்னர்
மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினர். இதில், முதலில் 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதன் பின்னர் 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். பின்னர் நேரம் செல்ல செல்ல 68 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விமானத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் பயணிக்கவில்லையென்றாலும் கூட கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் அனிக்காட் கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. ஏனெனில் நேற்று முன்தினம் அனிக்காட் கிராமத்தில் மேத்யூ பிலிப் என்பவர் உயிரிழந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு வந்திருந்தார்.
நேபாளம்
அதற்கு முன்னர் வரை நேபாளத்தில் இருந்துள்ளார். சுமார் 45 ஆண்டுகள் நேபாளத்தில் பணியாற்றி அவர் கேரளா வந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவர் நேபாளத்தில் இருந்தபோது இவருக்கு நண்பர்கள் வட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் இவரது மறைவு செய்தியறிந்து ராஜு தாக்குரி, ரபின் ஹமால், அனில் ஷாஹி, ஷரன் ஷாய் மற்றும் சுமன் தாப்பா என 5 நேபாள நண்பர்கள் நேபாளத்திலிருந்து கேரளாவுக்கு வந்திருந்தனர்.
இறுதிச்சடங்கு
இவர்கள் நேற்று முன்தினம் முழுவதும் பத்தினம்திட்டாவின் உள்ள பிலிப்பின் வீட்டில் இருந்திருக்கின்றனர். பின்னர் பிலிப்பில் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டு பிலிப்புக்கு பிடித்த நேபள பாடல் ஒன்றையும் பாடியுள்ளனர். இதனையடுத்து இறுதி சடங்கு முடிந்த பின்னர் ஐந்து பேரும் காத்மாண்டுவுக்க பயணித்துள்ளனர். அங்கிருந்து ராஜு தாக்குரி, ரபின் ஹமால், அனில் ஷாஹி என மூன்று பேர் மட்டும் பொக்கராவுக்கு விமானம் மூலம் பயணித்துள்ளனர். அவர்கள் பயணித்த விமானம்தான் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் இந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் அனிக்காட் கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது.
சோகம்
இந்த விபத்தை அறிந்தவுடன் இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் பெயர்களை பிலிப்பின் பேரன் ஜோயல் பரிசோதனை செய்துள்ளார். இவ்வாறாகதான் இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது. தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால் உடல்கள் முற்றிலுமாக எரிந்துபோயுள்ளதால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக கொடூரமான விபத்து இது என நேபாள விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். விபத்தையடுத்து நேபாளத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.