சபரிமலையில் இன்று விமரிசையாக நடந்த படிபூஜை !!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து ஐயப்பனை வழிபட்டனர். 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைந்ததால் நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு மகர விளக்கு பூஜை தொடங்கியது.
இதற்காக கோவில் நடை 30-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. நடை திறந்தது முதல் பக்தர்கள் அதிக அளவு வந்து ஐயப்பனை தரிசித்து சென்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 14-ந் தேதி மாலை நடைபெற்றது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு பக்தர்கள் 18-ம் படி வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இரவு அரிவராசனம் பாடப்பட்டதும் கோவில் நடை சாத்தப்பட்டது. சபரிமலையில் இன்று அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை தொடங்குகிறது. 19-ந் தேதி வரை படிபூஜை நடைபெறும். இதையொட்டி சபரிமலையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் (18-ந் தேதி) சபரிமலையில் சிறப்பு களபாபிஷேகம் நடக்கிறது.மறுநாள் (19-ந் தேதி) மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜை நடக்கிறது.அன்றைய தினம் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி பூஜை நிறைவடைந்ததும் சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.