நேபாளம்: விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!!
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 72 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் இந்தியர்கள். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை மீட்பதற்கு உள்ளூர்வாசிகள் பெருமளவு உதவியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே விமான விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இந்திய பயணி எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நேபாள விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கையை 45 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு அந்நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹல் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் நேபாளத்தில் 10க்கும் அதிகமான விமான விபத்துகள் நடந்துள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நேபாள விமானங்களை தங்கள் வான்வெளியில் பரப்புதற்கு 2013 ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.