;
Athirady Tamil News

நேபாள விமான விபத்து | அன்று கணவருக்கு நேர்ந்தது, இன்று மனைவிக்கு… – ஒரு பைலட் தம்பதியின் சோகப் பின்புலம்!!

0

16 ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு விமான விபத்தில் பைலட் தம்பதி உயிரிழந்த சோகமான பின்புலம் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான நேபாளத்தின் யேட்டி விமான நிறுவன விமானத்தின் துணை பைலட் அஞ்சு கத்திவாடாவும் (44) உயிரிழந்தார். அவருடைய உடலை அடையாளம் காணும் பணி தொடர்கிறது. அஞ்சுவைப் போலவே அவரது பைலட் கணவரும் 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற சோகப் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

அஞ்சு கத்திவாடாவுக்கு 6,400 மணி நேரம் விமானத்தை இயக்கிய பின்னணி உள்ளது. நேற்று அவர் விமானத்தை இயக்கினார். அவருடன் ஒரு இன்ஸ்ட்ரக்டர் பைலட்டும் இருந்துள்ளார். விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது. அதனை வைத்து ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

இதற்கிடையில், அஞ்சுவின் மரணம் குறித்து அவர் பணி புரிந்த விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. “அஞ்சு கத்திவாடா எப்போது அழைத்தாலும் உடனே பணியை ஏற்க தயாராக இருப்பார். அவர் பர்தோலா போன்ற சுற்றுலா தலங்களுக்கு சிறப்பாக விமானத்தை இயக்கியுள்ளார். ஆனால். நேற்று நடந்த விபத்தில் 68 பயணிகளும் விமான பைலட் உள்ளிட்ட பணியாளர்களும் இறந்துள்ளனர்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஞ்சு கத்திவாடா 2010-ல் தான் விமானியாக இருந்தார். அதற்கு 4 வருடங்களுக்கு முன்னதாக அவருடைய கணவர் உயிரிழந்திருந்தார். அவரும் ஒரு விமானி. சிறிய ரக பயணிகள் விமானத்தை இயக்கியபோது தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமானம் விபத்துக்குள்ளாக அதில் அவர் உயிரிழந்தார். 16 வருடங்களுக்குப் பின்னர் இப்போது அஞ்சு கத்திவாடாவும் விமான விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட உலகின் உயரமான 14 சிகரங்கள் இருக்கின்றன. இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்த விமான விபத்துகளில் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.