;
Athirady Tamil News

அயோத்தி-நேபாளத்தை இணைக்கும் சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் இயக்கப்படுகிறது !!

0

‘பாரத கவுரவ சுற்றுலா ரெயில்’ என அழைக்கப்படும் இந்த ரெயில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி டெல்லியில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. ‘ஸ்ரீராம்-ஜானகி யாத்திரை: அயோத்தியில் இருந்து ஜனக்பூருக்கு’ என்று இந்த ரெயில் பயணத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரெயில், நந்திகிராம், சீத்தாமர்கி, காசி, பிரயாக்ராஜ் வழியாக நேபாளம் செல்லும். காசியிலும், ஜனக்பூரிலும் என 2 இரவு பயணிகள் ஓட்டலில் தங்கலாம்.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நவீன, சொகுசு ரெயிலில் 2 உணவகங்கள், ஒரு நவீன சமையலறை, ஷவர்கள், சென்சார் அடிப்படையில் இயங்கும் கழிப்பறைகள், கால்களுக்கு மசாஜ் செய்யும் எந்திரங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும். 7 நாட்கள் கொண்ட இந்த ரெயில் பயணத்தில் முதல் நிறுத்தமாக, ராமர் பிறந்த இடமான அயோத்தி இருக்கும்.

அங்கு சுற்றுலாவாசிகள் ராம ஜென்ம பூமி கோவில், அனுமான் கோவில் போன்ற இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல நந்திகிராமில் பாரத் மந்திருக்கு செல்லலாம். இந்த ரெயில் கடைசி நிறுத்தமாக பீகாரின் சீத்தாமர்கி ரெயில் நிலையத்தில் நிற்கும். அங்கிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நேபாளத்தின் ஜனக்பூருக்கு பஸ்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த ரெயிலில் ஒருவருக்கான கட்டணம் ரூ.39 ஆயிரத்து 775 ஆக இருக்கும்.

அதில் உணவு, தங்குமிட வசதிக்கான கட்டணம் உள்பட அனைத்தும் அடங்கும். இந்த சுற்றுலா ரெயில், இந்தியா-நேபாளம் இடையிலான இருதரப்பு, கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும் என இந்திய ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.