டெல்லியில் பிரதமர் மோடி சாலை பேரணி: பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்!!
பா.ஜனதா பொதுச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. கன்வென்சன் சென்டரில் இன்று காலை தொடங்கியது.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் குறித்த திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஜே.பி.நட்டாவின் பதவி காலம் வருகிற 20-ந் தேதி முடிவடைகிறது. இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ (சாலை பேரணி) நடைபெற்றது. திறந்த வாகனத்தில் பேரணியாக வந்த பிரதமர் மோடி, பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என்.டி.எம்.சி. கன்வென்சன் சென்டருக்கு வந்தடைந்தார்.
இதையொட்டி பா.ஜனதா கட்சியினர் அந்த பகுதியில் பிரதமர் மோடியின் கட் அவுட்களை வைத்து வரவேற்பு அளித்தனர். படேல் சவுக், சன்சாத் மார்க் பகுதியில் பா.ஜனதா கொடிகளும், கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.