விலங்குகளை பாதுகாக்க ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் 2022-2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” எனும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், விலங்குகள் நல அமைப்புகள் பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்தல், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கிடவும், உறைவிடம் மற்றும் அவசர ஊர்தி சேவைக்காகவும், நீலகிரி -இந்தியா புராஜக்ட் பார் அனிமல் பண்ட் நேச்சர், சென்னை விலங்குகள் பராமரிப்பு அறக்கட்டளை, சென்னை மெட்ராஸ் விலங்குகள் மீட்பு சங்கம், சென்னை பிரித்வி விலங்குகள் நல சங்கம் மற்றும் சென்னை பைரவா பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, எம்.எல்.ஏ.க்கள் மரு.நா. எழிலன், த.வேலு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் (பொறுப்பு) டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் டாக்டர் எஸ். சுரேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.