;
Athirady Tamil News

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் பெரியசாமி உறுதி!!

0

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 182-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன்பிறகு அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு லண்டனில் சிலை வைத்து உலகறிய செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம். கேரள அரசிடம் நட்பான முறையில் தமிழக அரசு பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மேலும் பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். கேரளாவில் ஒருசிலர் அரசியலுக்காக முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர். இது ஒருபோதும் நடக்காது. எந்த சூழ்நிலையிலும் அணைக்கான உரிமை மற்றும் கண்ணகி கோவிலின் உரிமையை தமிழக அரசு விட்டு கொடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார். இதே போல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜக்கையன், பெரியாறு-வைகை பாசன ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ்பாபு மற்றும் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், கூடலூர் நீரிணைப் பயன்படுத்துவோர் சங்கம் நாம் தமிழர் கட்சி, பா.ஜ.கவினர், விவசாயிகள் விடுதலை முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சியினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

பாலார்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.