இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா? பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?
இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, நட்டஈட்டு தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாய் வீதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாயும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாயை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்தித்து பிபிசி தமிழ் வினவியது.
கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த கோமஸ், ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தனது மகன், மருமகள் மற்றும் மூன்று பேரப் பிள்ளைகளை இழந்துள்ளார்.
கொழும்பு – கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, கோமஸ் கருத்து தெரிவித்தார்.
கேள்வி :- உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தியளிக்கின்றதா?
பதில் :- இல்லை. இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம், இது ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. கால தாமதமாகிலும், இந்த தீர்ப்பு வந்ததற்கு ஓரளவிற்கு நாங்கள் திருப்தி அடைகிறோம். ஏனென்றால், நாங்கள் அவர்களை பற்றிய சிந்தனையிலும் அவர்களின் இழப்பை பற்றிய சிந்தனையிலும் எப்போதும் துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் சிறியதொரு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவே கருத்திற் கொள்கின்றோம்.
கேள்வி :- இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், எவ்வாறானதொரு நியாயத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில் :- இறைவனின் தீர்ப்பை தவிர நாங்கள் எதுவும் மேலதிகமாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே சம்பாதித்ததில் ஒரு சிறிய பங்கை இழக்கின்றார்கள்.
அவ்வளவு தான். இது எங்களுக்கு எந்தவிதத்திலும் திருப்தி இல்லை என்று சொல்வதற்கு காரணம், எங்களுடைய அன்றாடத் தேவைகளை பொருத்த வரை ஒரு பக்கம் இந்த பணத்தின் மூலம் திருப்தி அடையலாம். ஆனால், இழந்ததை எந்தவிதத்திலும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவினால் திருப்பி கொடுக்க முடியாது. எவ்வளவு பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் அவர் அந்த ஜனாதிபதி நாற்காலியை மாத்திரம் யோசித்தாரே தவிர, பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டார்.
அது இந்த தீர்ப்பின் மூலம் நன்றாக விளங்குகின்றது. அனைவரையும் பாதுகாக்குமாறு கோரியே ஜனாதிபதியாக நாங்கள் அவரை தேர்ந்தேடுத்தோம். ஆனால், அவர் அதை முழுமையாக செய்யவில்லை என்கின்றது தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோம்.
கேள்வி :- இந்த தீர்ப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?
பதில் :- அவர்களினாலும் இதனை ஜீரனிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால், எங்களுக்கு பண ரீதியிலான குறைபாடு பெரிதாக தெரியவில்லை. எனது குழந்தைகளின் சகோதரன், என்னுடைய மகன் எனக்கு பிறகு கிடைப்பாரா? கிடைப்பதற்கு ஏதாவது உத்தரவாதத்தை இவர்கள் கொடுப்பார்களா? என்னுடைய குழந்தைகள் என்னுடன் செலவிட்ட நாட்கள், நடந்துக்கொண்ட விதங்கள், இன்னும் எங்களை துக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றதே தவிர, இந்த பணத்தினால் அதனை திருப்திப்படுத்த முடியாது.
கேள்வி :- பொருளாதார நெருக்கடி தற்போது நாட்டை பெரிதும் பாதித்திருக்கின்றது. உங்களது மகன், உங்களின் குடும்பத்திற்கு உழைத்துக் கொடுக்கும் நபராக இருந்துள்ளார். அவர் இந்த தருணத்தில் உயிருடன் இருந்திருந்தால், இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நீங்கள் எவ்வாறு மீண்டெழுந்திருப்பீர்கள்?
பதில் :- இதுவொரு நல்ல கேள்வி. என்னுடைய இறந்த மகன் நல்ல உழைப்பாளி. அவன் ஒரு நேரம் கூட வீட்டில் இருப்பதில்லை. ஆட்டோ ஒன்று இருந்தது. ஆட்டோ செலுத்திக் கொண்டு, வேலைக்கும் சென்றார். ஒரு நாளைக்கு இரண்டு வேலைகளை செய்யக்கூடிய ஒரு உழைப்பாளியாக இருந்தார். எனக்கு நல்ல உதவியாக இருந்தது. இப்போதுள்ள பொருளாதார பிரச்னைக்கு அவர் இருந்திருந்தால், கஷ்டம் கொஞ்சம் குறைந்திருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கேள்வி :- இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது பொறுப்பிலிருந்து தவறியவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் நீதித்துறை ஊடாக எவ்வாறானதொரு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?
பதில் :- அநேகமாக நான் எதிர்பார்க்கின்றது அவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டும். உள்ளே இருக்கும் போது, என்ன பொறுப்பை தவறவிட்டார்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள். ஏன் நான் இப்படி செய்தேன் என்பதை தனிமையில் இருக்கும் போது ஓரளவுக்கேனும் உணர்வார்கள். அதனை உணரும் விதமாக சரி, அவர்களை உள்ளே தள்ள வேண்டும். அவர்களை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. பணத்தை கொடுத்து, தப்பிச் சென்றுவிடாமல், உள்ளே தனிமையில் இருந்து அவர்கள் உணர வேண்டும்.
இறந்த ஆத்மாக்களுக்கு தாங்கள் செய்த துரோகம் என்ன என்பதை உணர வேண்டும். இந்த வேதனையை அவர்கள் உணர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் இறந்தவர்களின் தாய், தந்தையர்கள் படும் பாடு, வேதனையை இவர்கள் இன்னும் உணரவில்லை. இந்த தீர்ப்பின் ஊடாக அவர்களின் பொருளாதாரத்தில் ஒரு சிறிய பகுதியைத்தான் இழக்கின்றார்கள். முழுவதையும் இழக்கவில்லை. அவர்களை உள்ளே தள்ளி, அவர்கள் தனிமையில் இருந்து, என்ன நடந்தது என்பதை யோசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.