இலங்கையில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், தேர்தல் நடத்த முடியுமா?
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
இதனால், 2023ம் ஆண்டுக்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், 5 வீதத்தை மீளப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார் என பந்துல குணவர்தன கூறுகின்றார்.
அதேபோன்று, சமூர்த்தி நிவாரண உதவித் திட்டத்தை வழங்கும் நடவடிக்கைகள் இரு வாரங்களுக்கு தாமதமாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
”2023ல் நாம் எதிர்பார்த்த அளவை விடவும், கடுமையான நிதிப் பற்றாக்குறையை திறைசேரி எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவைக்கு அறிவித்தார். 2022ம் ஆண்டு பொருளாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டமையே அதற்கான காரணமாகும். வரியின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட அரசாங்கத்தின் வருமானம், இந்த வருட ஆரம்பத்தில் குறைந்துள்ளது.
அதனால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் அரசாங்கத்துக்கு வரியின் ஊடாக கிடைக்கின்ற வருமானம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்தாலும், அத்தியாவசிய செலவினங்களை செய்ய வேண்டும். அரச சேவை சம்பளம், ஓய்வூதியம், அரச கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டி, வேறு நிவாரண உதவிகள் மற்றும் நாளாந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான செலவினங்கள் ஆகியவற்றுக்கான பணம் திறைசேரியிடம் கிடையாது.
மாத இறுதியில் சம்பளத்தை செலுத்தவும், ஓய்வூதியத்தை செலுத்தவும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அத்தயாவசிய நிவாரண உதவிகளை வழங்கத் தேவையான பணம் இல்லாமையினாலும், இந்த வருடம் முழுவதும் இந்த வருமான பிரச்னை காணப்படுகின்றமையினாலும் அனைத்து அமைச்சுக்களுக்கும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 5 வீதத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் சம்பளம் வழங்குவதில் காணப்படும் பிரச்னையினால், சமுர்த்தி நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை இரு வாரங்களுக்கு தள்ளிப் போடுவதற்கு சாத்தியம் இருப்பதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்தார்” என பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.
சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என நிதித் துறை ராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பில் முகாமைத்துவம் செய்யப்படும் போது, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நிவாரணங்கள் குறித்து முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறுகிறார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு ஓரளவு முன்னோற்றம் கண்டுள்ள போதிலும், முழுமையாக நாடு வழமைக்கு திரும்பவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.
நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
2023ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், செலவினங்களை குறைத்து, சுமார் 8 பில்லியன் ரூபாய் செலவில் தேர்தலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
10 பில்லியன் ரூபாயில், அரைவாசி தொகையே முதலில் தேவைப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகை தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், 4 முதல் 6 மாதங்களில் சென்றதன் பின்னரே செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
திறைசேரியிலிருந்து கிடைக்கப் பெறும் நிதியின் ஊடாகவே, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து செல்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
திறைசேரி, தாம் கோரும் பணத்தை வழங்காத பட்சத்தில், அடுத்த கட்டமாக எவ்வாறான மாற்று நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து சிந்திக்க முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
தேர்தலை நடத்த முடியுமா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8 பில்லியன் செலவிடப்படும் என கூறிய தேர்தலை, கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், தாம் 5.8 பில்லியன் ரூபாவில் நிறைவு செய்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படுகின்ற செலவினத்திற்கு ஏற்ற வகையிலேயே தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.