;
Athirady Tamil News

இலங்கை: குழந்தையை பள்ளிக்கு அனுப்ப முடியாத அவல நிலையில் மலையக மக்கள் – கள நிலவரம்!!

0

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை நேரடியாகவே பாதித்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் குழந்தைகள் பலர், தமது பாடசாலை கல்வியைப் பாதியில் கைவிட்டுள்ளதைக் காண முடிகின்றது. இந்த விஷயம் தொடர்பில் ஆராய்வதற்காக பிபிசி தமிழ், கள ஆய்வொன்றை மேற்கொண்டது. கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை பகுதியிலுள்ள சிறிய பெருந்தோட்ட பகுதியே கனேபல்ல தோட்டம். மலையகப் பகுதியாக கனேபல்ல தோட்டத்தில், இந்திய வம்சாவளித் தமிழர்களே வாழ்ந்து வருகின்றார்கள். இறப்பர் பால் வெட்டுதல் மற்றும் நாளாந்த கூலித் தொழில்களில் இந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கனேபல்ல தோட்டத்தின் மேல் பிரிவு பகுதியில் மாத்திரம் சுமார் 125 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு வாழ்ந்து வரும் 125 குடும்பங்களில் 5 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை கல்வி கற்கும் வயதெல்லையைக் கொண்ட சுமார் 80 மாணவர்கள் இருக்கின்றார்கள். இந்த 80 மாணவர்களில் 20 மாணவர்கள் தற்போது தமது பாடசாலை கல்வியைக் கைவிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது, இந்த தோட்ட பகுதியில் மாத்திரம் நான்கில் ஒரு பகுதி மாணவர்கள், தமது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக் கொண்டுள்ளனர். மலையகத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் பலவற்றிலும் இந்தப் பிரச்னை இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மலையகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றனர்.

கனேபல்ல பகுதியில் வாழும் சசிகலாவுக்கு, நான்கு பிள்ளைகள். 21 வயது நிரம்பிய மூத்த மகன், கொழும்பில் வேலைக்குச் சென்று, தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாக அவர் கூறுகின்றார். ஏனைய மூவரும் 18 வயதுக்குக் குறைவான பாடசாலை கல்வியை தொடரும் வயதைக் கொண்டவர்கள். எனினும், இந்த மூவரில் ஒருவர் மாத்திரமே தற்போது பாடசாலை கல்வியைத் தொடர்ந்து வருகின்றார். 18 வயதாகும் தனது இரண்டாவது மகள், குடும்ப நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை கல்வியைப் பாதியில் கைவிட்டு, தற்போது ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருவதாக சசிகலா கூறுகின்றார். ”ஒரு மகன் தான் வேலை செய்கிறார். பாடசாலை செல்லும் வயதில் ஒருவர் வேலை செய்கிறார். ஒருவர் மாத்திரமே படிக்கின்றார். வசதி இல்லாததால் பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் நிறுத்தி வைத்திருக்கின்றேன்,” என சசிகலா தெரிவிக்கின்றார்.
இலங்கை, வறுமை, கல்வி

நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்ற நிலையில், மூன்று அப்பியாச கொப்பிகளை வாங்குவதற்கு அந்த ஆயிரம் ரூபா சென்று விடுமென அவர் கூறுகின்றார். ”ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம். அதுல கொப்பி வாங்க எல்லாம் போதாது. 1000 ரூபாய்க்கு மூன்று கொப்பி வாங்கினேன். வேறு பொருட்களை வாங்க முடியாது. கஷ்டம் காரணமாகத்தான் இவரை பாடசாலைக்குச் செல்லாமல் நிறுத்தினேன்,” என்று சசிகலா குறிப்பிடுகின்றார். பாடசாலை செல்லும் வயதில், வேலைக்குச் செல்லும் சசிகலாவின் இரண்டாவது மகள் சுஜித்ரா, பிபிசி தமிழுக்குத் தனது கவலையைப் பகிர்ந்துக்கொண்டார். ”முடிந்த அளவுக்கு பாடசாலைக்குச் சென்றேன். வீட்டில் கஷ்டம். அதற்குப் பிறகு போக முடியவில்லை. பஸ் செலவுக்குப் பணம் இல்லை. அதனால் தான் வீட்டிலிருந்து வேலைக்குப் போகின்றேன். இப்போது வேலைக்குப் போகின்றேன், ஆனாலும் படிப்பதற்கு ஆசை இருக்கின்றது. வீட்டு கஷ்டத்தால் படிக்க போக முடியவில்லை. ஒவ்வொரு நேரம் சாப்பிடக்கூட பணம் இருக்காது,” என சுஜித்ரா தெரிவிக்கின்றார்.

சுஜித்ரா

இதேபோன்று, தனது குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பாத மற்றுமொரு தாயைச் சந்தித்தோம். இவர் கனேபல்ல பகுதியைச் சேர்ந்த தனபாக்கியம். ”மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளையை மட்டும்தான் படிக்க வைக்க முடியும். மற்ற இரண்டு பேரையும் படிக்க வைக்க முடியாது. எங்களுக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். ஒரு ஆள் வேலை செய்ற சம்பளத்தை வைத்துத்தான் வீட்டைக் கொண்டு போகின்றோம்.

தனபாக்கியம்

ஒருவருடைய சம்பளத்தில் எல்லாம் செய்ய முடியாது. ஐந்து பேர் இருக்கின்றோம். ஒரு ஆளுக்கு தான் வேலை. அதில் தான் குடும்பத்தை கொண்டு போகின்றோம்.

எனக்கு சரியாக வேலைக்கு போக முடியவில்லை. மகளுக்கு சுகமில்லை என்றால், நான் செல்ல வேண்டும். பணம் இல்லா விட்டால், யாரிடமாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அவர் வந்த பின்னர் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதனால் கடைசி மகளைத் தான் பாடசாலைக்கு அனுப்புகின்றேன். கிழமைக்கு ஐந்து நாளும் அனுப்ப முடியாது. ஒரு நாள் மட்டும் தான் அனுப்ப முடியும். பஸ்ஸிற்கு போக காசு இருக்காது. இப்படித்தான் குடும்பத்தைக் கொண்டு போகின்றோம்,” என்று தனபாக்கியம் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.