;
Athirady Tamil News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றிய ஈழ விடுதலை போராளிகள் – இனி என்னவாகும்?

0

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் வசமாகியுள்ளது. மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாத அரசியல் கட்சிகள் மற்றும் போராளிகள் அடங்கிய கூட்டணியாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிளவுபட்டு, தற்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் கூட்டமைப்பை தமதாக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இறுதியாக மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து செயற்பட்டு வந்தன. இதன்படி, மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி, செல்வம் அடைகலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) மற்றும் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளே கூட்டமைப்பில் இறுதியாக செயற்பட்டன. இந்த நிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதை அடுத்து, ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற ஐந்து கட்சிகள், கூட்டமைப்பை தமது வசப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), செல்வம் அடைகலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), கதிர் தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டமைப்பை தமதாக்கிக் கொண்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிதாக இணைந்துக்கொண்ட கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் சின்னமாக வீட்டுச் சின்னத்தில் இதுவரை காலமும் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனிவரும் காலத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றாக இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தாமாகவே அதிலிருந்து வெளியேறியதால், குறித்த கட்சிகள், தமிழ் மக்களின் நலன்களையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொருட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 14 அம்சங்கள்

1. மேற்கூறிய அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும் கூட்டாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும்.

2. மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய செயற்குழு ஒன்று அமைக்கப்படும்.

3. இத்தேசியச் செயற்குழு, வடக்கு-கிழக்கு தமிழ் மக்களிற்கான முழுமையான அரசியல் தீர்வை நோக்கமாகக் கொண்டு, அதனை அடைவதற்கான அனைத்து வழிகாட்டல்களையும் நெறிமுறைகளையும் வகுத்து செயற்படும்.

4. செயற்குழுவிலும் செயற்குழுவால் அமைக்கப்படும் ஏனைய குழுக்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு சம உரிமைகளும் சம அளவான பிரதிநிதித்துவமும் வழங்கப்படும்.

5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவின் ஏகமனதான முடிவுகளுக்கும் தவறும் பட்சத்தில் அதன் பெரும்பான்மை முடிவுகளுக்கும் அங்கத்துவக் கட்சிகள் கட்டுப்படும்.

6. மேற்கண்ட கட்சிகளையும் தேவையேற்படின் ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட வலுவான கட்டமைப்பாக உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

7. தேர்தல் விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்ற பெயரிலும் அதன் சின்னமான குத்துவிளக்கையும் கொண்டு செயற்படும்.

8. இதற்கான நிரந்தர ஒரு கட்டமைப்பை சாத்தியமான விரைவில் உருவாக்கும்வரை இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் கட்சித் தலைவர்கள் உட்பட தலா மூவரைக்கொண்ட தேசிய செயற்குழு ஒன்று நிறுவப்படும்.

9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை நடவடிக்கைகளையும் இந்த செயற்குழுவே வழிநடத்தும்.

10. தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கையாள்வதற்கும், ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய பிற பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் தேவையான நிபுணர் குழுக்களையும் ஏனைய உப செயற்குழுக்களையும் தேவைகருதி தேசிய செயற்குழு நியமித்துக்கொள்ளும்.

11. அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டாலும் தத்தமது சுயாதீனத் தன்மையையும் தனித்துவத்தையும் பேணிக்கொள்ள உரித்துடையவை.

12. ஒவ்வொரு கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலைமை அமைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், அங்கத்துவக் கட்சிகளையோ அல்லது கூட்டமைப்பின் கொள்கை, வேலைத்திட்டங்களை ஊடகங்களிலோ பொதுமேடைகளிலோ அல்லது சம்பந்தமில்லா தரப்பினரிடமோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ கருத்திடுவது தவிர்க்கப்பட வேண்டும். இவை தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளையும் கண்காணிக்க ஒழுக்காற்றுக் குழு நிறுவப்படும்.

13. ஒரு கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி, உறுப்பினர்கள் மற்றொரு கட்சிக்குத் தாவினால் அதனை அங்கத்துவக் கட்சிகள் ஏற்கக்கூடாது.

14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமானது கூட்டுத் தலைமைத்துவமாகவும் சுழற்சி முறையிலான தலைமைத்துவமாகவும் அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான முழுமையான யாப்பு உருவாகின்றபோது, இந்த விடயங்கள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டு உள்ளடக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது, எப்படி உருவானது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது, 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சிகளும், ஈழ விடுதலைக்காக போராடிய முன்னாளி போராளிகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலையீட்டில் இந்த கூட்டமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தி, இந்த கூட்டமைப்பை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாமையினால், வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் 2001ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது.

கூட்டமைப்பின் முதலாவது தேர்தலில், நாடாளுமன்றத்தில் 15 ஆசனங்களை தம்வசப்படுத்திக் கொண்டது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்ற விமர்சனங்கள் வெளியான நிலையில், கூட்டமைப்பிற்கு முதல் தடவையாக பிளவு வர ஆரம்பித்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதையடுத்து, 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் கூட்டமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்த, தமிழர் விடுதலை கூட்டணி உள்ளிட்ட சிலர், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தனர்.

அதன்பின்னர், தனது கட்சி சின்னமாக உதய சூரியன் சின்னத்தை பயன்படுத்த, வீ.ஆனந்தசங்கரி நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவை பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னமாக வீட்டுச் சின்னத்தை பயன்படுத்துவதற்கான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2004ம் ஆண்டு எடுத்திருந்தது.

2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 22 ஆசனத்தை தன்வசப்படுத்திக் கொண்டு, மாபெரும் கூட்டமைப்பாக உருவெடுத்தது.

அதன்பின்னரான காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மேலும் பலர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தனர்.

இதன்படி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட சிலர் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கூட்டணியை ஸ்தாபித்தனர்.

இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013ம் ஆண்டு நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் களமிறக்கப்பட்டு, வடக்கில் 38 தொகுதிகளில் 30 தொகுதிகளை தன்வசப்படுத்தி, வடக்கு மாகாண சபை ஆட்சியை கைப்பற்றியது.

வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையை கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சி.வி.விக்னேஸ்வரன் தனதாக்கிக் கொண்டார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவிற்கு தேர்தல் காலத்தில் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 16 ஆசனங்களை கைப்பற்றி, நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இனி என்ன நடக்கும்?

தமிழித் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்கனவே பிளவுகள் காணப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக பிளவடைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சன், பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

தேர்தல் காலங்களில் பிரிந்து, பின்னர் இணைந்துக்கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

”இந்த கூட்டமைப்பு, ஏற்கனவே பிரிந்த ஒரு கூட்டமைப்பு. இப்போது முழுமையாக உடைந்துள்ளது. கூட்டமைப்பாக இருந்தும் எந்தவித பயனும் இல்லை. பிரிந்தும் எந்தவித பயனும் இல்லை. புதிய கூட்டமைப்பை உருவாக்கி, எந்த பயனும் வர போவதில்லை. தேர்தலுக்காக பிரிகின்றார்கள், கூடுகின்றார்கள். மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. இது தமிழ் மக்களின் நலன் சார்ந்த கூட்டணி அல்ல. இது தேர்தலுக்கான கூட்டு. ” என்கிறார் அவர்.

“சேர்வார்கள், உடைவார்கள், சேர்வார்கள், உடைவார்கள். இந்த நிரந்தரமான கூட்டணி அல்ல. தேர்தலில் போட்டியிட்டு, ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியே இது. வீ.ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த கூட்டமைப்பிலிருந்து ஏற்கனவே பிரிந்து சென்றார்கள். இது அனைத்தும் தேர்தல் காலப் பகுதிகளிலேயே இடம்பெற்றன.” என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.

புதிய கூட்டமைப்பின் பதில்

ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உரித்தான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது முழுமையாக ஈழ விடுதலைப் போராளிகள் வசமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணை ஊடகப் பேச்சாளர் க.துளசி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

”தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் போராடினாலும், போராளிகள் அரசியல் நீரோட்டத்திற்குள் செல்வதற்கு இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவைப்பட்டது. ஆகவே, ரணில் விக்ரமசிங்கவின் இந்த சதி முயற்சியை முறியடித்து, விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய அத்தனை போராளிகளும் ஒரே அணியில் ஒன்று திரண்டு, நாங்கள் எங்கள் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். எங்கள் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

ஈழ விடுதலை போராளிகளுக்கு உரித்தானதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக போராளிகளின் வசம் வந்து விட்டது. இலங்கை தமிழரசு கட்சி தேர்தலுக்கு பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துக்கொள்வதாக பிரசாரம் செய்துக்கொண்டிருக்கின்றது. தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி, கூட்டமைப்புடன் இணைய விரும்பினால், சுமந்திரன் இல்லாது வருவார்களாயின், அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலனை செய்யும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணை ஊடகப் பேச்சாளர் க.துளசி குறிப்பிடுகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.