முஸ்லிம்கள், யூதர்களை இணைக்கும் பாரம்பரிய தின்பண்டம் – எப்படி தெரியுமா?
யூதர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஹனுக்காவும் ஒன்று. ‘ஹனுக்கா’ என்பது யூத மக்கள் கொண்டாடும் தீபத் திருவிழா. இந்த பண்டிகையின் போது எண்ணெயில் பொரித்த பொருட்களை யூத மக்கள் தயாரிக்கின்றனர். அப்படி தயாரிக்கப்படும் பண்டைய ஸ்பானிஸ் தின்பண்டமான ‘இஸ்ஃபெங்'(Isfenǧ) இல்லாமல், ஹனுக்கா பண்டிகை முழுமையடையாது.
ஹனுக்கா பண்டிகையின் வரலாறு
கி.மு. 168ஆம் ஆண்டில் கிரேக்க ஆட்சியாளர்களிடமிருந்து ஜெருசலேமை கைப்பற்ற நடந்த மக்கள் கிளர்ச்சியை நினைவுகூரும் வகையில் ஹனுக்கா பண்டிகை யூத மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஹனுக்கா என்றால் ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள்.
யூதர்களின் மத நூல்களில், இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதில் யூத மக்கள் புனிதமாக கருதும் ‘இரண்டாவது கோயிலில்’ எண்ணெய் இல்லாமல் எட்டு நாட்கள் தொடர்ந்து அங்கிருந்த புனித விளக்கு எரிந்தது.
இதை குறிக்கும் வகையில் தான் ஹனுக்கா பண்டிகையின் ஏழு நாட்களின் போது, எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகள் இந்த பண்டிகையின் முக்கிய அம்சமாக மாறியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால்தான் ஒவ்வொர் ஆண்டும் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் போது உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் முட்டைகளால் செய்யப்பட்ட அப்பம் அல்லது பழ ஜாம்கள் நிரப்பப்பட்ட டோனட்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஹனுக்கா பண்டிகையின் போது யூத மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் எட்டு கிளைகள் கொண்ட மெழுகுவர்த்தி விளக்குகள் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக ஒன்பது கிளைகள் இருக்கும் விளக்குகள் இந்த பண்டிகை காலங்களின் போது பயன்படுத்தப்படுகிறது.
13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், ‘ஆண்டலூஸ்'(இன்றைய மொராக்கோ மற்றும் ஸ்பெயின் பகுதி) என்று அழைக்கப்பட்ட இடத்தில் ‘இஸ்ஃபெங்’ உணவை யூதர்களும், முஸ்லிம்களுடன் பயன்படுத்தி இருக்கின்றனர்.
ஹனுக்கா பண்டிகையின் போது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் யூதர்கள், இனிப்பு பண்டமான ‘இஸ்ஃபெங்’ உணவை தயாரிக்க தவறுவதில்லை. ஒவ்வொரு யூத குடும்பத்தின் தட்டுகளிலும் ‘இஸ்ஃபெங்’ இடம்பெறும்.
‘இஸ்ஃபெங்’ என்பது மாவு, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் டோனட் போன்ற உணவாகும். இந்த திண்பண்டம் பண்டைய ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு ஒரு உணவாகும்.
இஸ்ஃபெங் உணவை மிக எளிதாக தயாரிக்க முடியும். இதை செய்ய எந்த கருவிகளும் தேவையில்லை. சர்க்கரை சேர்க்கப்பட்ட மாவை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து, அதனை நீள வாக்கில் உருளை போல தேய்த்து எடுத்து, அதன் இரு முனைகளையும் சேர்த்து ஒரு வட்ட வடிவுடன் நடுவில் துளை இருப்பது போலமடிக்க வேண்டும்.
இப்படி மடிக்கப்பட்ட மாவை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் இஸ்ஃபெங் ரெடி. இது பார்க்க பொன் நிறத்தில், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வடை, அதிரசம் போன்ற அமைப்பில் இருக்கும்.
எலனா பினியிரா, இடைக்காலத்தின் வரலாறு மற்றும் அந்த காலத்தின் உணவு முறைகள் குறித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளவர். மேலும், பண்டைய ஸ்பெயினின் உணவு வகைகள் குறித்த புத்தகம் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார்.
டாக்டர் எலனாவின் குழந்தைப் பருவம் பிரான்சில் உள்ள உள்ளூர் மக்களுடன் கழிந்தது. ஆனால் அவரது தந்தை, ஆண்டலஸின் பண்டைய யூத வம்சாவளியை சேர்ந்தவர்.
பண்டைய ஸ்பானிஷ் உணவு பற்றிய நமது கேள்விகளுக்கு பதில் கூற, டாக்டர் எலினாவை விட சிறந்தவரை நம்மால் அடையாளர் காண முடியாது. அவர் எழுதிய ‘யூதர்கள், உணவு மற்றும் ஸ்பெயின்’ என்ற புத்தகம் இந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது.
“இஸ்ஃபெங் ஒரு பெரிய அளவிலான டோனட் ஆகும். இதன் மேல் மற்றும் கீழ் பகுதி முழுவதும் குமிழ்களைக் கொண்டு இருக்கும். இது வெளிப்புறத்தில் மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்,” என டாக்டர் எலனா கூறுகிறார்.
ஸ்பானிய மற்றும் போர்த்துக்சீஸிய தீபகற்பப் பகுதியில் உள்ள சுரங்கங்களில் இஸ்ஃபெங் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த சுரங்கம் குறித்து நமக்கும் கிடைத்துள்ள 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிகப்பழமையான புத்தகமான, ‘கிதாப் அல்-தபிக்’ நூலில் இந்த குறிப்புகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள இஸ்ஃபெங் தயாரிக்கும் முறையும், இப்போது நாம் பின்பற்றும் முறையும் மாறுபடுகிறது. அந்த காலத்தில் நடுவில் துளை இல்லாத இஸ்ஃபெங் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஸ்பானிஸ் அரபு மொழியில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் இஸ்ஃபெங்கில் மீண்டும் துளைகள் இடம்பெற தொடங்கியது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறையின்படி, பண்டைய காலங்களில் ரவை, ஈஸ்ட் மற்றும் உப்பு ஆகியவற்றை வெந்நீரில் சேர்த்து இஸ்ஃபெங் தயாரிக்கப்பட்டதாக டாக்டர் எலனா கூறுகிறார். அந்த இஸ்ஃபெங்கின் ஒரு பக்கம் பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரிப்பது அவசியம், ஆனால் மற்றொரு பக்கத்தை வெள்ளையாக விட வேண்டும்.
இஸ்ஃபெங் தயாரிக்கும் பாரம்பரியம் ஸ்பெயினில் முஸ்லிம் ஆட்சி காலத்திலிருந்து தொடங்குகிறது என்றாலும், ஆண்டலஸிருந்து குடிபெயர்ந்தவர்களுடன் இந்த உணவு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இன்று இஸ்ஃபெங், வட அமெரிக்கா முதல் மத்திய கிழக்கு நாடுகள் வரை உணவு வகைகளில் காணப்படுகிறது.
1492 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிரனாடா நகரம் வீழ்ந்தபோது, ஸ்பெயின் ராணி இசபெல்லா யூதர்களையும் முஸ்லிம்களையும் ஆண்டலஸ் பகுதியில் இருந்து வெளியேற்றினார்.
அவர்களில் சிலர் இப்போது மொராக்கோவின் ஒரு பகுதியாக இருக்கும் வட ஆப்பிரிக்கா பகுதிக்கு தப்பிச் சென்றனர். அவர்களுடன் சேர்ந்து சிறிய மாற்றங்களுடன் இஸ்ஃபெங் திண்பண்டமும் ஆப்பிரிக்காவுக்கு சென்றது.
இப்படித்தான் இந்த மரபு லிபியா மற்றும் துனிசியாவிலும் பரவியது, அங்கு முறையே ஸ்னஃப்ஸ் மற்றும் பம்பலோனி என்று பெயரில் இஸ்ஃபெங் அழைக்கப்படுகிறது.
பின்னர் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவானபோது, மக்கள் அங்கும் இஸ்ஃபெங் பாரம்பரியத்தை மீட்டெடுத்தனர்.
1948 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், சுமார் இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 180 யூதர்கள் மொராக்கோவை விட்டு வெளியேறி இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அண்மையில் வெளியான ஒரு புள்ளி விவரம், இந்த எண்ணிக்கை தற்போது நான்கு லட்சத்து 72 ஆயிரத்து 800 ஐ எட்டியுள்ளது என்று கூறுகிறது.
இஸ்ஃபெங்கின் வெவ்வேறு பெயர்களை பார்க்கும் போது, ஆண்டலஸ் பகுதியில் உருவான இந்த இனிப்பு, ஸ்பெயின், போர்ச்சுகல், வட ஆப்பிரிக்கா வழியாக எப்படி இஸ்ரேலுக்கு வந்தது என்ற வரலாற்றை நாம் அறிய முடியும்.
இஸ்ஃபெங் என்பது ஸ்பானிஷ் மொழியில் ‘ஸ்போஞ்சா'(esponja) என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் ‘பஞ்சு போன்ற மென்மையான’ என்பதைக் குறிக்கும் அரபுச் சொல்லான ‘ஸ்ஜெங்'(sjenğ) என்ற வார்த்தையில் இருந்து உருவாகி இருக்கலாம், என்று டாக்டர் எலினா விளக்குகிறார்.
ஹீப்ரூ மொழியில் உள்ள ‘ஸ்பாக்'(sfog) என்ற வார்த்தை, வட்டமான டோனட் என்பதை குறிக்கிறது.
தற்போது மொராக்கோவில், யூதர்களின் எண்ணிக்கை 3 ஆயிரம் ஆக குறைந்த போதிலும், அங்குள்ள உள்ளூர் வணிகர்கள் இந்த திண்பண்டத்தை இன்னும் விற்று வருகின்றனர். மொராக்கோவின் தெருக்களில் ஆண்டு முழுவதும் இது கிடைக்கிறது.
மொராக்கோவிலிருந்து புலம்பெயர்ந்து இஸ்ரேலில் குடியேறிய யூதர்களும் இஸ்ஃபெங் இல்லாது ஹனுக்காவை கொண்டாடுவதில்லை.
இதைக் குறிப்பிட்டு, ‘இஸ்ஃபெங்’ என்ற தின்பண்டத்தின் மூலம் முஸ்லிம், யூத மக்கள் மத்தியில் இருக்கும் தொடர்புகள் குறித்து டாக்டர் எலினா பேசினார்.