;
Athirady Tamil News

உறுப்பினர்களுக்கு சஜித்தின் நெறிமுறைக் கோவை!!

0

ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் பெறும் உள்ளூராட்சி சபைகளிலுள்ள உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் ஒழுக்க நெறிமுறை கோவை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதற்காக அனைவரும் பிரமாணப் பத்திரம் மூலம் கையொப்பம் பெறப்படும் எனவும், நெறிமுறை கோவையை மீறினால் உறுப்பினர் பதவி பறிபோகும் எனவும், அதேபோல், உறுப்பினர்கள் கொந்தராத்துச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்ணியமான மற்றும் நாகரீகமான உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அரசின் அதிகாரம் தமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனது புத்தாக்க வேலைத்திட்டத்தின் மூலம் அனைத்தையும் செயற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் உலகின் மற்ற அபிவிருத்தியடைந்த உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைக்கப்படும் எனவும், அதனூடாக உலக வளங்களை எமது நாட்டிற்கும் மாகாணங்களுக்கும் கொண்டு சேர்ப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உறுப்பினர் பதவி என்பது பணம் சம்பாதிக்கும் பதவி அல்ல எனவும், அது ஓர் பொது சேவைகளுக்கான பதவி எனவும், இது பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொருந்தும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேபோல், தேசிய மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களை தொடர்புபடுத்தி உள்ளூராட்சி நிறுவனங்களில் கெபகரு மாபியத் திட்டமொன்று உருவாக்கப்படும் எனவும், இதன் மூலம் பாடசாலை மாணவர்களின் அபிவிருத்தியுடன் பிரதேசத்தின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவி்த்தார்.

இதற்கு மேலதிகமாக ஸ்மார்ட் மாநகர அல்லது பிரதேச சபை உறுப்பினர்கள் குறைந்த பட்சம் மாதம் ஒரு நாள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும் எனவும், குறித்த வேளையிலையே அந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் மந்திரிகளிடம் செல்லும் திட்டம் மாற்றப்பட்டு மக்களிடம் மந்திரிகள் செல்லும் திட்டமொன்று வகுக்கப்படும் எனவும், கட்சி பாகுபாடின்றி இளைஞர் ஆலோசனைக் குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும், அவர்கள் தவிசாளர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களை மேற்பார்வை செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களை இவ்வாறு வலுப்படுத்துவதன் மூலம் எதிர்கால தலைமைகள் உருவாகும் எனவும், உள்ளூராட்சி சபையின் ஊடாக இந்நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி தொழில்நுட்ப புரட்சியை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது அரசியலில் வெற்றுப்போச்சுக்களோ, தனிநபர் விமர்சனமோ, சேறுபூசல்களோ இல்லை எனவும், வேலை செய்வதை மட்டுமே விரும்புவதாகவும், இதன் பிரகாரம், எந்தவொரு அரசியல்வாதியும் முடிந்தால் தன்னுடன் அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்ய முன்வாருமாறு சவால் விடுப்பதாகவும், நம் நாட்டில் மாற்று அணி என விளம்பரம் செய்யும் அனைத்துச் சக்திகளும் செயல்பாடற்ற வெற்றுக்கோஷங்ளை எழுப்பிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களால் பொய்யான கோஷங்களையும் பொய்யான புரட்சிகளையும் மட்டுமே செய்ய முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.