;
Athirady Tamil News

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயல் – பேராசிரியர் சர்வேஸ்வரன்!!

0

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அரசியலமைப்பில் இருக்கும் 13ஐ இதுவரையில் அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.

அத்துடன் 13 முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி கூறினாலும் அது தொடர்பில் பல கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்ற சமஷ்டி முறையிலான தீர்வு அல்லது அதைப் போன்ற முறையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு தீர்வாகும்.

ஆனால், இன்றுள்ள வினா என்னவென்றால், தற்போதைய அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்துக்குள், இனப்பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக அமையக்கூடிய சமஷ்டி முறையிலான தீர்வு என்பது எந்தளவு சாத்தியமாகும் என்பதாகும். அது மாத்திரமல்லாது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் முக்கியமாகும்.

அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வொன்றை வழங்குகின்ற விதத்தில் இந்தியா எந்தளவு அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது கூட சந்தேகத்துக்கிடமான ஒன்றாகும்.

ஏனெனில், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவிக்கின்றதே தவிர, அதற்கு அப்பால் செல்வது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கும் கருத்து என்பது தமிழ் மக்களை பொறுத்தமட்டில் முக்கியமான விடயமாகும்.

ஜனாதிபதியின் இந்த கூற்றை தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது முக்கியமாகும். என்னை பொறுத்தவரை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வானது ஒரு படிமுறையிலே இருக்க முடியும்.

ஏனெனில், உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை.

அதனால் இந்த சந்தர்ப்பத்தில் ‘வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை’ என்ற நிலையில் தமிழ் மக்கள் இருக்க முடியாது. அதனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தின் முதலாவது படி நிலையாக, 13ஆம் திருத்தத்தின் அதிகார பரவலாக்கத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் மாகாண சபை முறைமையும் இல்லாமல் செல்லும் நிலை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்.

அத்துடன் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றபோதும் அதில் இருக்கும் அனைத்து விடயங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவாரா என்ற கேள்வியும் எழுகின்றது.

13ஆம் திருத்தத்துக்கு கீழ் இருக்கும் மாகாண சபை முறைமையில், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற, அவரினால் மட்டுமே பதவி விலக்கக்கூடிய ஆளுநருக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களால் நியமிக்கப்படுகின்ற மாகாண முதலமைச்சருக்கும் மாகாண சபைக்கும் மேலான அதிகாரங்களை, ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு வழங்குகின்ற விதமாக ஜனாதிபதி அந்த தீர்வினை வழங்குவாரா அல்லது ஆளுநர் என்பவரை ஒரு சடங்கு ரீதியிலான ஆளுநரை வைத்துக்கொண்டு முதலமைச்சருக்கும் மாகாண சபைக்கும் அந்த அதிகாரங்களை சுதந்திரமாக பிரயோகிக்கக்கூடிய வகையில் செயற்படுத்துவாரா என்ற கேள்வி எழுகின்றது.

அடுத்த விடயம் என்னவென்றால், அடுத்துள்ள இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக இணைப்பது.

வடக்கு, கிழக்கு ஒன்றாக இருந்த மாகாண சபையை பிரிக்கின்ற விதமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், இந்த இணைப்பு என்பது 13ஆம் திருத்தத்துக்கு கீழ் சாத்தியமற்றது என பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இல்லை.

வடக்கு, கிழக்கை பிரிப்பதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் 13ஆம் திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக இணைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த விடயம் உயர் நீதிமன்ற தீர்ப்பினால் மாற்றப்படவில்லை. அதனால் இன்றைக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சாதாரண சட்டத்தை கொண்டுவந்து இணைக்க முடியும். எனவே, ஜனாதிபதி 13ஐ நடைமுறைப்படுத்தும்போது அந்த நடவடிக்கைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுகின்றது.

அதேபோன்று காணி. பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஜனாதிபதி எந்தளவுக்கு நடைமுறைப்படுத்துவார்? காணி அதிகாரம் ஓரளவுக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் பொலிஸ் அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கேள்விகளுக்கு விடை, 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதனை வினைத்திறன் உள்ள மாகாண சபையாக இயங்கச்செய்ய வேண்டும் என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றார்கள் என்பதிலேயே தங்கி இருக்கின்றது.

அத்துடன் 13ஆம் திருத்தம் என்பது அரசியலமைப்பில் உள்ள விடயம். அதனை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. அரசியலமைப்பில் இருக்கும் 13ஐ அமுல்படுத்தாமல் இருப்பதும் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.