மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது – பீரிஸ்!!
மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சர்வதேசம் அறிந்து கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று (16) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை உரிய தினத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் ஆரம்பமாகும்.
சுதந்திர மக்கள் கூட்டணி ஊடாக வலுவாக தேர்தலில் போட்டியிடுவோம்.தேர்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தலை பிற்போட சட்டத்தில் வழிமுறை ஏதும் கிடையாது,ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து வலியுறுத்துகிறார்.மக்களாணை இல்லாத அரசாங்கத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகத்தின் பிரதானி மூன்று முறை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது.ஆகவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேசம் இந்த அரசாங்கத்திற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது,ஏனெனில் சர்வதேசம் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும்.
இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தீர்மானமிக்கது.தேர்தல் பெறுபேற்றை வைத்து மக்களின் அரசியல் தீர்மானம் எவ்வாறு உள்ளது என்பதை சர்வதேசம் விளங்கிக் கொள்ளும்.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறு பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்தும் என்றார்.