இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் – சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ!!
சீனா, இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் வளரும் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம் எனவும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீனக் கம்னியூஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சென் ஸோ தெரிவித்தார்.
சீன கம்னியூஸக் கட்சியின் 20ஆவது மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று (16) திங்கட்கிழமை ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனக் கம்னியூஸக் கட்சியின் மாநாட்டில் எதிர்கால உலகை எவ்வாறு கட்டியமைப்பது என்பது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகமாக இருக்கின்ற ஷி ஜின்பிங் தனது இலக்குகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நிலையான சமாதனம், உயர்த மனிதச் சுட்டிகள், உட்கட்டமைப்பு மேம்பாடுகள், புத்தாக முயற்சிகளுக்கு வாய்ப்புக்களை வழங்குதல், பசுமைபுரட்சியில் பங்களிப்புச் செய்தல் என்பன அவற்றுள் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.
உலகளாவிய பொருளாதாரத்தினை வளர்ச்சியப் பாதையில் இட்டுச் செல்வதானது, எமது அயல் மற்றும் பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்பதும், மக்களுடன் மக்கள் என்ற மூலோபாயத்தின் மூலமாக அனைத்துச் சமூகங்களும் முகங்கொடுக்கும் சவால்களிலிருந்து வெற்றி பெறமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், சீனாவானது, 114நாடுகளின் பிரதான வர்த்தகப் பங்காளர்களாக காணப்படுகின்றது. அத்தோடு, 2012ஆம் ஆண்டு தனது தேசிய காங்கிரஸ் மாநாட்டை நடத்தும்போது அதன் மொத்த தேசிய உற்பத்தியானது 54 ட்ரில்லியன் யுவானாக காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தனது தொத்ததேசிய உற்பத்தியானது 114 ட்ரில்லியன் யுவானாக காணப்படுகின்றது.
அதேநேரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 7.2சதவீதமாக காணப்படுவதோடு உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் அது 18.5சதவீதமாக உள்ளது.
ஒரேபட்டி மற்றும் பாதை முன்முயற்சியானது, 149நாடுகளின் பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் பங்கேற்பதானது அந்நாடுகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெருமளவில் நன்மைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
அத்திட்டத்தில் இலங்கை பங்கேற்றமையால் அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகம் ஆகியவை மேம்பாட்டைக் கண்டுள்ளன. அதனை சிறந்த உதாரணங்களாக கூற முடியும். மேலும், ஒரேபட்டி மற்றும் ஒரேபாதை முன்முயற்சியானது, உள்நாட்டின் பாரிய மேம்பாட்டிற்கு அடிப்படையாக அமைவதோடு, சர்வதேச கூட்டாண்மை விருத்திக்கும் வித்திடுவதாக உள்ளது. ஷ
பொது இலக்குகளுடன் சந்தைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல், பூகோள பாதுகாப்பு முன்முயற்சி, பூகோள வர்த்தக முன்முயற்சி ஆகியவற்றை உலக நாடுகளில் நல்லாட்சிப் பண்புகளை உறுதிப்படுத்துவதற்கான சரியான முறையில் வழிகாட்டுவதற்கும் சீனா தயாராக உள்ளது.
சீன கம்னியூஸக் கட்சியானது, எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு தயராகவுள்ளது. அத்துடன், அந்த அரசியல் கட்சிகளின் ஆட்சி அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் அதிகளவில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றது.
சீன கம்னியூஸக் கட்சியானது உலகளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளுடன் ஆழமான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இலக்குகளைக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாரகவே உள்ளது. இதன்மூலம் மக்களுடன் மக்கள் மூலோபாயம், மற்றும் பரந்துபட்ட தொடர்பாடல் ஆகியவற்றையும் மேம்படுத்த முனைகின்றது.
இலங்கையும், சீனாவும் பாரம்பரிய நட்பு நாடுகளாக உள்ளதோடு பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர மூலோபாய நண்பகர்களாவும் உள்ளன. அந்த வகையில் இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இறப்பர், அரிசி ஒப்பந்தமானது 70ஆண்டுகளை அடைந்துள்ளதோடு, இராஜதந்த இருதரப்பு உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
மேலும், இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் பூகோளத்தின் மாறுதல்களுக்குள் அகப்படாது தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் நீடிக்கின்றது. குறிப்பாக பல்வேறு தளங்களில் சீனாவின் கூட்டுறவு பங்களிப்புக்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.
அதேநேரம், எதிர்கால மேம்பாட்டை அடிப்படையாக் கொண்டு இலங்கையுடன் தொடர்ந்தும் இருதரப்பு மூலோபாயக் கூட்டுறவுடன் சீனா அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளது என்றார்.