;
Athirady Tamil News

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் – விமல்!!

0

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுப்படும்.

13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர,தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)இடம்பெற்ற அரச பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்துக்கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி,பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் குறுகிய காலத்தில் நாடு இரண்டாக பிளவடையும்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத,சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்த்தும் இன அடிப்படையிலான பிரச்சினை,நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் 2002 ஆம் ஆண்டு முன்வைத்த கொள்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம்,வடக்கிழக்கு மாகாண சபையை தற்காலிக அரசாங்கமாக மாற்றியமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக பதவி வகித்த நீங்கள் (ஜனாதிபதி)அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். அதற்கமைய ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’கைச்சாத்திடப்பட்டது.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்,சர்வதேச பிரிவினைவாத அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதுடன் ஒருசில தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விடுதலை புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை விடுதலை செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளல்,இராணுவ முகாம் மற்றும் அதனை அண்மித்த காணிகளை விடுவித்தல்,மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான ‘எல்’ வலய காணிகளை பிரதேச செயலகம் ஊடாக விடுவித்தல்,காணி கொள்கையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரம் காணிகளை வழங்கும் திட்டத்தை வகுத்தல்,ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.காணாமல் போனார் அலுவலகம் சட்டத்தின் ஊடாக இயற்றப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சர்வதேச தலையீடு தென்னாப்பிரிக்காவில் வெளிப்படையாக காணப்படுவதை அறிய முடிகிறது.

2002 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவேற்ற முடியாத விடயங்களை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்ற முயற்சிப்பது நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்களை திசைத்திருப்பி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கீன்றீர்கள் என்பதை நன்கு அறிவோம். பிரிவினைவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாத்து வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 10 பிரதான யோசனைகளை முன்வைக்கிறோம்.

இராச்சியத்தின் நிறைவேற்று அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரிவுப்படுத்தி அதற்கு இணையாக மக்கள் சபை என்பததொன்றை உருவாக்கி அரச செயற்பாடுகளில் மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை வினைத்திறனான முறையில் செயற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளை உள்ளடக்கிய வகையில் உள்ளூராட்சி அபிவிருத்தி சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் உள்ளூர் அதிகார சபைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தின் பிரதி அமைச்சரின் அதிகாரத்துடன் குறைந்தளவிலான அமைச்சரவை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு விசேட சலுகைகள் ஏதும் வழங்க கூடாது.

நாட்டின் சகல இனங்களின் தேசியத்துவம் மதிக்கப்படுவதுடன்,மதம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுப்பாடுகள் காண்பிக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல்,ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.