ராஜஸ்தானில் 1,500 கோசாலை: ரூ.1,377 கோடி ஒதுக்கீடு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் 1,500 கோசாலைகள் கட்டுவதற்கு, பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.1,377 கோடியை முதல்வர் அசோக் கெலாட் ஒதுக்கி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட் பதவி வகிக்கிறார். மாநிலத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஒரு கோ சாலை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும், 2022 – 2023 பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் 1,500 கிராம பஞ்சாயத்துகளில் தலா ஒரு கோ சாலைகள் கட்டுவதற்கு நேற்று உத்தரவிடப்பட்டது. அதற்கு ஒரே கட்டமாக ரூ.1,377 கோடி நிதியை முதல்வர் அசோக் கெலாட் ஒதுக்கி உள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த கோ சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத் துகளில் அமைக்கப்படும். அவற்றை கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிக்கும்.
2022 -23-ம் ஆண்டில் முதல் கட்டமாக 200 கோ சாலைகள் கட்டப்படும். அடுத்த 2023 – 2024-ம் ஆண்டில் 1,300 கோ சாலைகள் கட்டப்படும். இதற்கான நிதியில் 90 சதவீதத்தை அரசு வழங்கும். மீதமுள்ள 10 சதவீத நிதியை கோ சாலைகள் பராமரிக்கும் நிர்வாக ஏஜென்சி ஏற்கும்.
வெளியில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பயிர்கள் பாதிக்கப் படுகின்றன. தற்போது கோ சாலைகள் கட்டி அங்கு கால்நடைகளை பராமரிப்பதன் மூலம் விவசாயிகளும் பலன் அடைவார்கள்.