பரபரப்பை ஏற்படுத்திய உதைபந்தாட்டப் போட்டியில் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கைப்பற்றியது.!! (PHOTOS)
இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்திய புதிய விடியல் உதைபந்தாட்டப் போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசையும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கைப்பற்றியது.
டான் தொலைக்காட்சி குழுமம் நிப்பொன் அனுசரணையில் 8ஆவது ஆண்டாக புதிய விடியல் உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. யாழ்ப்பாணம் லீக் இந்தத் தொடரை ஒருங்கிணைத்து நடத்தியது.
யாழ். துரையப்பா பொது விளையாட்டரங்கில் நடந்த இந்தப் போட்டியின் இறுதியாட்டத்துக்கு நாவாந்துறை சென். மேரிஸ், சென். நீக்கிலஸ் அணிகள் தகுதிபெற்றன. நேற்று மாலை 3.30 மணிக்கு மைதானம் நிறைந்த ரசிகர்களுடன் போட்டி ஆரம்பமானது.
போட்டியின் ஆரம்பத்தில் அசத்தலாக ஆடிய சென். நீக்கிலஸ் அணி கோல் ஒன்றை அடித்து முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்களே இருக்கையில் சென். மேரிஸ் அணி அதிரடியாக கோல் ஒன்றை போட்டது. இதனால், முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தபோது 1 – 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே சென். மேரிஸ் அணி தனது இரண்டாவது கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து அந் அணி தற்காப்பில் கவனம் செலுத்தியது.
ஆனாலும், சற்றும் சளைக்காத சென். நீக்கிலஸ் அணி அரைமணி நேரத்தில் பதில் கோலை அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டி நிறைவடையும் வரை இரு வீரர்களும் எவ்வளவோ முயன்றும் கோல் எதையும் அடிக்க முடியவில்லை.
இதையடுத்து சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. முதல் சமநிலை தவிர்ப்பு உதையில் 4 – 4 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. இரண்டாவது வாய்ப்பில் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நாவந்துறை சென். மேரிஸ் அணி.
வெற்றி பெற்ற சென். மேரிஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடத்தைப் பெற்ற சென். நீக்கிலஸ் அணிக்கு 4 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.
தொடரில் சிறந்த கோல் காப்பாளராக சென். மேரிஸ் அணியின் சிந்துஜன், சிறந்த வீரராக சென். நீக்கிலஸ் அணியின் ஜெரோம், சிறந்த கோல் அடிப்பாளராக சென். நீக்கிலஸ் அணியின் டெனோசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், விருந்தினர்களாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே. பி. எம். குணரத்ன, யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் டி. பி. எஸ். என். போதொட்ட, நிப்பொன் பெயின்ற் பிராந்திய விற்பனை முகாமையாளர் மகேந்திரன் பெருமாள், டான் தொலைக்காட்சி குழுமத் தலைவர் எஸ். எஸ். குகநாதன், டான் தொலைக்காட்சி குழுமத்தின் பணிப்பாளர் தே. ஜொனி ஆகியோர் பங்கேற்றனர்.