தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்படவில்லை – உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!!
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை. அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே சபாநாகர் உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள தீர்ப்பை சபைக்கு அறிவித்தார்.
சபாநாயகர் இதன்போது தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 121 -1 அரசியலமைப்புக்கு அமைய உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்த தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்துக்கு தெரிவிக்கின்றேன்.
உயர் நீதிமன்றத்தினால் குறித்த சட்டமூலத்தின் விதிமுறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கீழ் சட்டமூலத்தின் விடயங்கள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணாக அமைவதில்லை எனவும் பாராளுமன்றம் சாதாரண பெரும்பான்மையுடன் தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
அதனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உத்தியோகபூர்வ அறிக்கையில் அச்சிடுமாறு உத்தரவிடுகின்றேன்.