ஆந்திராவில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையின்போது கத்தி வெட்டி 2 பேர் பலி!!
ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை நடத்தப்படுகிறது. சேவல்களின் காலில் கட்டப்பட்ட கத்தியுடன் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்வதை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சேவல் சண்டையை வேடிக்கை பார்ப்பார்கள்.
சண்டையில் பங்கேற்கும் சேவல்கள் மீது லட்சக்கணக்கில் பணம் கட்டுவார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளாக நடந்த சேவல் சண்டையின்போது பலர் உயிரிழந்ததால் ஆந்திர மாநில அரசு சேவல் சண்டைக்கு தடை விதித்து இருந்தது. ஆனாலும் தடையை மீறி சேவல் சண்டை நேற்று நடத்தப்பட்டது. காக்கிநாடா மாவட்டம், கிர்லாம்புடி பகுதியில் நடந்த சேவல் சண்டையை அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 43) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது சேவல்கள் மேலே பறந்தபடி ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டன. மேலே பறந்து வந்த சேவல் ஒன்றின் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரிய பிரகாஷின் கழுத்தில் பலமாக வெட்டியது. இதில் சூரிய பிரகாஷின் தொண்டையில் உள்ள நரம்பு துண்டித்து ரத்தம் கொட்டியது. அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சூர்யா பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கிழக்கு கோதாவரி மாவட்டம், நல்ல கர்லா மண்டலம், அனந்த பள்ளியில் நடந்த சேவல் சண்டையை பத்மா ராவ் (வயது 22) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது பறந்து வந்த சேவல் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி பத்மாராவின் முழங்காலுக்கு கீழே வெட்டியது. இதில் காலில் இருந்த நரம்பு துண்டிக்கப்பட்டு அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.