செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தில் தனி அலைகள்- இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி தனி அலைகள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. நாசாவின் செவ்வாய் வளி மண்டலம் மற்றும் நிலையற்ற பரிணாமம் (மேவன்) விண்கலத்தில் லாங்முயர் ஆய்வு மற்றும் அலைகள் கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட மின்சார புல தரவுகளின் உதவியுடன் செவ்வாய் காந்த மண்டலத்தின் உள்ள தனி அலைகளை நவி மும்பையை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோ மேக்னடிசம் (ஐ.ஐ.ஜி) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த தனி அலைகள் செவ்வாய் காந்த மண்டலத்தில் உள்ள தனித்த மின்புல ஏற்ற இறக்கங்கள் ஆகும். அவை துகள் ஆற்றல், பிளாஸ்மா இழப்பு மற்றும் அலைத்துகள் இடைவினைகள் மூலம் போக்குவரத்தை கட்டுப்படுத்துகின்றன. இதுகுறித்து அந்த ஐ.ஐ.ஜி.நிறுவனத்தின் விஞ்ஞானி பாரதி காகட் கூறுகையில், பொதுவாக எந்த விண்வெளி நிறுவனமும் தனது பேலோடில் இருந்து தரவை 6 மாதங்களுக்கு தக்க வைத்து ஆய்வு செய்யும். அதன் பிறகு கொள்கையின்படி பொது களத்தில் தரவுகளை வைக்க வேண்டும்.
நாசா அந்த மேவன் தரவை பொது டொமைனில் வைத்த போது எங்களது குழு அதனை படித்தது. 3 மாத பகுப்பாய்வுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தில் தனி அலைகளை கண்டுபிடித்தோம் என்றார். இந்த கண்டுபிடிப்புகள் தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இது 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை சுற்றி 5 பயணங்களின் போது மேவன் விண்கலத்தால் கவனிக்கப்பட்ட 450 தனி அலை துடிப்புகளின் பகுப்பாய்வை கூறுகிறது.