;
Athirady Tamil News

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: நகர மேயர்!!

0

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ் விமர்சித்திருக்கிறார். இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நியூயார்க் மேயர் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிகாகோ, வாஷிங்டன் டிசி போன்ற நகர மேயர்களும் இந்தக் கருத்தை முன்வைத்த்துள்ளனர்.

முன்னதாக, குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் உள்ள மேயர்கள் தங்கள் மாகாணங்களுக்கு வரும் புலம்பெயர்ந்த மக்களை ஜனநாயகக் கட்சி ஆளும் மாகாணங்களுக்கு திரும்பி அனுப்பி வருகின்றனர். இதனால், சர்ச்சை உண்டான நிலையில், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

எரிக் ஆடம்ஸ் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அங்குதான் தற்போது குடியரசு கட்சி மேயர்களால் அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்த மக்கள் பலர் எங்கு செல்வது என்று தெரியாமல் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து எரிக் ஆடம்ஸ் கூறும்போது, “அமெரிக்காவின் தெற்கு எல்லையில் புலம்பெயர்ந்தவர்களால் நெருக்கடி நிலவுகிறது. பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. வீடற்றவர்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் வன்முறையும் அதிகரித்துள்ளது. நியூயார்க்கிற்குள் குடியேறுபவர்களின் வருகையால் நகரத்திற்கு 2 மில்லியன் டாலர் வரை செலவு அதிகரித்துள்ளது. நகரம் ஏற்கெனவே ஒரு பெரிய பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு நியூயார்க்கில் இனி இடமில்லை. எங்களால் புலம்பெயர்ந்து வரும் மக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலம்பெயர்ந்து வரும் மக்களும், இந்த நகரில் வாழும் மக்களும் இந்த துன்பங்களுக்கு தகுதியானவர்கள் கிடையாது. இந்த நெருக்கடியை தடுக்க தேசிய அரசு உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தேசிய அளவிலான அரசு அதன் வேலையை செய்ய வேண்டிய நேரமிது” என்றார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.